தாய்ப்பால் கூட மாசாகலாம் தாமிரபரணி மாசாகலாமா?

தாமிரபரணி நதி பொதிகைமலையிலுள்ள பூங்குளம் பகுதியில் உற்பத்தியாகி காரையார், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, திருநெல்வேலி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்துõர் அருகிலுள்ள புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. ஒரே மாவட்டத்தில் உருவாகி அதே மாவட்டத்தில் கடலில் கலக்கும் என்ற பெருமை பெற்ற இந்த நதி, நெல்லை மாவட்ட பிரிவினைக்குப் பிறகு தான் மற்றொரு மாவட்டமான துõத்துக்குடியிலுள்ள புன்னக்காயலில் கடலில் கலக்கிறது என்ற நிலையை அடைந்தது. 

படம்: நெல்லையில் தாமிரவருணி புஷ்கரத்தை முன்னிட்டு கால்நாட்டு விழா இன்று நடந்தது.


குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் சஞ்சரிப்பார். இப்படி 12 முறை மாறி, 144 ஆண்டுகளை எட்டும் போது, நதி தீரங்களில் மகா புஷ்கரம் என்னும் புனித நீராடல் நிகழ்ச்சி நடத்தப்படும். அப்போது அந்த நதிக்கு பூஜை செய்யப்பட்டு மரியாதை நடக்கும். இம்முறை குரு பகவான், துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார். இந்த சமயத்தில் தாமிரபரணியில் மகாபுஷ்கரம் நடத்த உள்ளனர். இந்தியாவில் மகாபுஷ்கர விழா நடக்கும் 12 நதிகளில் இரண்டு நதிகள் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது நமக்கெல்லாம் பெருமை. கடந்த முறை குரு துலாம் ராசிக்கு வந்த போது, காவிரியில் மகாபுஷ்கரம் கொண்டாடப்பட்டது. அக்டோபரில் குரு, விருச்சிகத்துக்கு பெயர்ச்சியானதும் அக்., 12 முதல் 23 வரை தாமிரபரணி நதியில் மகாபுஷ்கரம் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. 

ஆனால், தாமிரபரணி நதி நீர் குளிக்கவோ, குடிக்கவோ சரியானது தானா என்பது தான் மக்கள் முன்புள்ள மில்லியன் டாலர் கேள்வி. தற்போது இந்த நதி மிகவும் அழுக்கடைந்து விட்டது. குறிப்பாக தாமிரபரணியின் ஆரம்பக்கட்டமான காரையார், பாபநாசம் பகுதிகளிலேயே இது அழுக்காகி விட்டது என்பது வேதனைக்குரிய விஷயம். இதற்கு முக்கிய காரணம் பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மையும், பரிகாரம் என்ற பெயரில் செய்யும் அட்டகாசங்களும் தான்.

பக்தர்கள் அணிந்து வரும் ஆடைகளை “இதை ஆற்றிற்குள் போடுங்கள், அப்போது தான் தோஷம் நீங்கும்,” என பரிகாரம் செய்பவர்கள் மூடநம்பிக்கையை வளர்க்கிறார்கள். இந்த ஆடைகளை இன்ன கடையில் வாங்குங்கள் என்று சிபாரிசு வேறு. அதற்கு கமிஷன் பெற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலுள்ள சில ஜோதிடர்களுக்கும், பரிகாரக்காரர்களுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது. தங்களிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களை மூளைச்சலவை செய்து, “பாபநாசம் சென்று நாகதோஷம், செவ்வாய் தோஷம் கழியுங்கள். இல்லாவிட்டால் <உயிருக்கு ஆபத்து,” என பயமுறுத்துகின்றனர். இதை நம்பும் பொதுமக்கள், அவர்கள் குறிப்பிடும் நபர்களிடம் ரூ.1500 முதல் ரூ.5000 வரை கொடுத்து பரிகாரம் செய்கின்றனர். ஜோதிடர் தரப்புக்கு கமிஷன் போய்விடும்.

இதுபோன்ற பரிகாரங்கள் பாபநாசத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்ததில்லை. அதிகபட்சம் போனால் ஆடி, தை அமாவாசை நாட்களில் ஏராளமான மக்கள் வந்து தர்ப்பணம் செய்து விட்டு போவார்கள். அதில் சேரும் குப்பை உடனடியாக அள்ளப்படும். அவ்வளவு தான்! ஆனால், இப்போது அமாவாசை தர்ப்பணத்துக்கு வருபவர்களுக்கு பழம், தேங்காய், எள் ஆகியவற்றை கேரிபேக்குகளில் வைத்து விற்கின்றனர். அவை மலைபோல ஆற்றங்கரையில் குவிக்கப்படுகிறது. இதுதவிர மக்கிப்போகாத தட்டுகளில் உணவருந்தி விட்டு ஆற்றுக்குள் வீசி எறிவது, அசைவ உணவருந்தி விட்டு எலும்புகளை உள்ளே போடுவது, எல்லாவற்றுக்கும் மேலாக குடித்து விட்டு, பாட்டில்களை பாறைகளில் வீசி உடைத்து அட்டகாசம் செய்து, குளிப்பவர்களின் கால்களை பதம் பார்ப்பது, பெண்கள் நாப்கின்களை தண்ணீருக்குள்ளேயே விடுவது, சோப்பு, ஷாம்பு உபயோகத்தால் நுரை பெருகி அழுக்கானது என சமீபத்தில் தாமிரபரணியின் ஆரம்பமே கடும் பாழாகி விட்டது.

ஆறு, குளங்களில் உள்ள நீரில் கலந்துள்ள அமிலம் மற்றும் சோப்பு, ஷாம்பூவில் உள்ள காரம் கலந்த பொருட்களை பி.எச் (பொட்டன்ஷியல் ஆப் ஹைடிரஜன்) என்னும் அளவீடு கொண்டு அளக்கிறார்கள். பாபநாசநாதர் கோவில் முன்புள்ள படித்துறையில், ஓடும் தண்ணீரில் அது அளவுக்கு மீறி இருந்தது என்கிறார்கள் உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதை விட தாமிரபரணி கெட்டுப் போனதற்கு என்ன சான்று வேண்டும்! இதை விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு செய்து, சரியான தகவலை மக்களுக்கு அளித்து விழிப்புணர்வு அளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை.

பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களைக் கேளுங்கள். 
அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?

“நாங்கள் தாமிரபரணியை எங்கள் தாயாக மதிக்கிறோம். குழந்தை போல் நேசிக்கிறோம். அந்தக்காலத்தில் பெண்கள் மாதவிடாய் ஆனால் இங்கே குளிக்கவே வரமாட்டார்கள். அந்தளவுக்கு புண்ணிய நதியாக இதை நேசித்தார்கள். கை, கால்களில் புண் வந்தால், அம்மா எங்களை தண்ணீரில் இறக்கி விடுவாள். உள்ளே வசிக்கும் (மன்னிக்கவும்..வசித்த...)மீன்கள் எங்கள் கால் புண்களை கடிக்கும். சற்று வலிக்கும். ஆனால், அதன்பின் புண்ணே வராது. இப்போது அந்த மீன்களை குண்டு வீசி கொன்று, கரையில் பொரித்து விற்கிறார்கள். நாங்கள் நெல்லை மாவட்டத்தின் சிறப்பு உணவான கூட்டாஞ்சோறு பொங்கி எடுத்து வருவோம். அதை சாப்பிட இலையோ, தட்டோ கொண்டு வர மாட்டோம். படித்துறை படிகளை கழுவிவிட்டு, அதில் வைத்து சாப்பிடுவோம். காய்கறி கழிவுகளை மீன்கள் சாப்பிட்டு விடும். அந்தளவுக்கு படித்துறைகள் சுத்தமாக இருந்தன. இப்போது சுற்றுலாதலம் என்ற பெயரில் எங்கள் நதியை பாழாக்கி விட்டார்கள். தாய்ப்பாலைக் கூட மாசாக்கலாம். எங்கள் தாய் தாமிரபரணியை மாசாக்கலாமா“ என்று.

1985லேயே இங்கு வந்த சில பயணிகள் மினரல் வாட்டர் கொண்டு வந்தார்கள். அப்போது தினமலர் நாளிதழில் வெளியான கட்டுரையில், “இந்த தண்ணீரை கொட்டி விட்டு, தாமிரபரணி நீரை எடுத்துச் செல்லுங்கள். இது மினரல் வாட்டரை விட சுத்தமானது” என எழுதப்பட்டிருந்தது. அந்தளவுக்கு சுத்தமாக இருந்த தண்ணீர் மாசுபட காரணம் மக்களின் பொறுப்பற்ற தன்மையே தவிர வேறு ஏதுமில்லை. எதற்கெடுத்தாலும் அதிகாரிகளை குற்றம் சொல்ல முடியாது. இங்கிருக்கும் வனத்துறையினர் அகஸ்தியர் அருவி போன்ற இடங்களில் ஷாம்பூ, சோப்பு உபயோகிக்க தடை விதித்தாலும் யாரும் கேட்பதில்லை. அவர்களும் அபராதம் விதிக்கிறார்கள், கண்டிக்கிறார்கள். ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் வரும் இடங்களில் இது போன்ற சோதனைகள் முழுபலனைக் கொடுக்காது. கடைசியாக <உள்ளூர் மக்கள் இங்குள்ள தலையணையில் குளிக்கும் உரிமையை இழந்தார்கள். தலையணையில் உள்ளூர் மக்களுக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது. அது மாசுபட்டால் என்னாவது! எனவே அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுத்து தலையணைக்கு பூட்டு போட்டார்கள். ஆனால், சில வியாபாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பணம் என்ற ஒன்றைத் தவிர அவர்களுக்கு எந்த நோக்கமும் கிடையாது. இங்கு தரமான ஓட்டல்களும் கிடையாது. 

இவ்வளவு இடைஞ்சல்களுக்கும் மத்தியில் தான், உள்ளூர் முக்கியஸ்தர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள் இணைந்து நதியில் கிடந்த துணிகளை அள்ளினார்கள். அது 100 டன் எடை இருந்தது. கொஞ்சம் கூட பொறுப்பற்ற தன்மை இது. இங்கு சில மடங்கள் இருக்கின்றன. இவர்கள் வாடகை அல்லது வேறு ஏதோ லாபம் கருதி, பரிகாரம் செய்பவர்களுக்கு கொடுத்துள்ளார்கள். அது மட்டுமல்ல..சிலர் பசுக்களை கோவிலுக்கு காணிக்கையாகக் கொடுக்க வந்தால், ‘நாங்கள் வளர்க்கிறோம்’ என்று சொல்லி, அவற்றையும் வாங்கி விற்று விடுகிறார்கள். இதுபற்றி கோவில் சார்பில் அறிவிப்பும் வைத்துள்ளார்கள். ஆனால் பலன் பூஜ்யமே.

பக்தர்களை தங்கள் மடங்களுக்கு இழுத்துச் செல்ல புரோக்கர்களும் இருக்கிறார்கள். அதிகாரிகள் இந்த விஷயத்தில் மட்டும் கண்டும் காணாமல் இருப்பது தான் ஏனென்று புரியாத புதிர். உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் எதற்கெல்லாமோ போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், தாமிரபரணியை பாதுகாக்க ஒரு போராட்டம் கூட இல்லை. அவ்வப்போது தாமிரபரணியை பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு சுத்தப்படுத்துகிறார்கள். ஆனால், கிடைக்கும் பலன் சிறிதளவே.

கடந்த ஆண்டில் காவிரியில் புஷ்கரம் நடந்தது. அப்போது காவிரி மாசுபட்ட அளவிற்கு எல்லையே கிடையாது. அங்கும் பரிகாரம் என்ற பெயரில் துணிகளை அவிழ்த்துப் போட்டு நாசம் செய்து விட்டனர். 

பாபநாசம் சுத்தமாக வேண்டுமென்றால், பரிகாரங்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள், பைகளுக்கு 100 சதவீத தடை வேண்டும். பாபநாசம் பகுதியை விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் இருந்து பிரித்து, குற்றாலம் போல தனி டவுன்ஷிப் ஆக்க வேண்டும். அங்கு சுகாதாரப்பணிகள் தீவிரமாக நடக்க வேண்டும். நகராட்சியே கவனிப்பதாக இருந்தால், பாபநாசத்துக்கு என தனி சுகாதாரப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். ஒரு பேப்பர் கூட இங்கு பறக்கக்கூடாது. சில்லரை வியாபாரிகளை கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும். பேப்பரில் சுற்றி பண்டங்கள் விற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரும்புக்கர நடவடிக்கைகளே தாமிரபரணியைக் காப்பாற்றும். இல்லாத பட்சத்தில் புஷ்கரம் போன்ற விழாக்கள் இந்த நதியை மாசுபடுத்தவே உதவும்.

views: 3120
   

Leave a Comment

Note: HTML is not translated!