திருப்பதி பிரசாதமும் அதன் வியாபாரமும்


கோயில் பிரசாதம் என்றாலே நம் நினவுக்கு வருவது திருப்பதி லட்டு. இந்தியாவில் முதன்முதலில் கோவில் பிரசாதத்தை காசு வாங்கி விற்க துவங்கியது திருப்பதி திருமலை வேங்கடத்தான் கோயிலில் தான். 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இக்கோயிலின் பூசை விவகாரங்களை ராமானுச கூடம் என்னும் தென்கலை மடத்தைச் சேர்ந்தவர்கள் கவனித்தனர். அதன் வெளிவிவகாரங்கள் அதாவது நிதி விவகாரங்கள், நிலங்களை குத்தகைக்கு விடுத்து அதன் மூலம் வரும் வருமானங்கள், செலவுகள், விழா ஏற்பாடுகள் இவற்றை ‘ஸ்தானத்தார்’ என்று சொல்லப்படும் அலுவலர் குழுவினர் கவனித்துக் கொண்டனர். ஆனால் வருவாய் இருந்தும் வெங்கடத்தான் ஆபரணவகைகள் பாரமரிப்பு அன்றி அழிவுற ராமானுஜ கூட மடாதிபதி வற்புறுத்தியும் ஸ்தானத்தார் அதைப் பராமரிப்பு பணி செய்யவில்லை. எனவே அன்றைக்கு மடத்தின் அதிபதியாக இருந்த கந்தாடை ராமாநுச ஐயங்கார் என்பவர் கோயில் பிரசாதத்தை விற்று ஏழுமலையானின் பாரமரிப்பு பணியை கவனிக்க முடிவு எடுத்து செயல்பட்டார். இது ஸ்தானத்தாருக்குப் பிடிக்கவில்லை இப்படி ஸ்தானத்தாரை மீறி ராமானுச கூடமும் கந்தாடை ராமானுஜ ஐயங்காரும் தன்னிச்சையாக செயல்படுவது பிடிக்காமல் இந்த விவகாரம் பிரச்சனையானது.


அப்போது திருமலை கோயில் சாலுவ நரசிம்மராயரின் ஆளுகையில் இருந்தது. சாலுவ நரசிம்மர் திருமலையின் கீழேயே உள்ள சந்திரகிரி கோட்டையை தலைமையாகக் கொண்டு தமிழ்நாடு முழுதும் ஆண்டுகொண்டிருந்த கால கட்டம். இந்த மன்னர்தான் திருமலைக் கோயிலில் எல்லா நிகழ்ச்சிகளையும் முறைப்படுத்தியவர். திருமலை வேங்கடவன் புராணம் எழுத வைத்தவர். பலவகை பிரசாதங்கள் பெரிய அளவில் செய்ய கட்டளையிட்டதோடு அதற்கான நிலங்களையும் தானமாக ஒதுக்கி கல்வெட்டு சாஸனமும் செய்தவர். திருமலை வேங்கடவன் புகழ்மாலையாக பாடிய அன்னமய்யா கீர்த்தனைகளுக்கும், அன்னமய்யாவுக்கும் ஆதரவளித்தவர். அவரால் ஒரு கீர்த்தனையின் மூலம் பாடப்பட்டவர். இவரிடம் திருமலை ஸ்தானத்தார் சென்று ராமானுச கூடத்து கந்தாடை ராமானுச ஐயங்காரின் செயல்கள் குறித்து முறையிட்டனர். நரசிம்ம ராயர் திருமலைக் கோயிலுக்கு இதற்காக விஜயம் செய்தார். கோயிலில் உள்ள ஆபரணங்களையும் பிற வஸ்துக்களையும் பார்த்தார். விவரம் புரிந்தது. அரசர் அங்கேயே ஒரு சாஸனமும் (தெலுங்கிலும் தமிழிலும்) 1495ஆம் ஆண்டில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி எழுதி வைத்தார். கல்வெட்டின் கடைசி வரியில் ஒரு வேறு ஒரு தகவலையும் தெரிவிக்கிறது. ஆக அன்று முதல் பிரசாதம் விற்பது முறைப்படி ராஜகட்டளை மூலம் அங்கீகரிக்கப்பட்டது

“இந்த ஆக்ஞை பிரகாரம், திருமலை ஸ்ரீனிவாசனுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாபரணங்களோடு, தங்கம், வெள்ளி வஸ்துக்களையும் மராமத்து செய்து பராமரிக்கும் வேலையை கந்தாடை ராமானுச ஐயங்காரிடம் ஒப்புவிக்கப்படுகிறது.அவர்களின் பங்கு மூலம் கிடைத்த பிரசாத விற்பனையில் கிட்டிய பணத்தைக் கொண்டு இந்த மராமத்து வேலைகளைச் செய்தவுடன் மீதப் பணத்தை ஸ்ரீவாரி பண்டாரத்திடம் (பொக்கிஷ அதிகாரி) ஒப்படைக்கவேண்டும்”. 


. பெரிய பெரிய ராஜாக்கள், செல்வந்தர்கள் கொடையாக கொடுக்கும் பிரசாதங்கள் ராமானுச மடத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் மேலும் ஆலய ஸ்தானத்தார்களுக்கு ஒரு பெரிய பங்கு பெற்று அவைகளை விற்றுக்கொள்வர், பிரசாதம் விற்பது என்பது இப்படி நடைமுறைக்கு வந்தது. இந்த அளவு விகிதம் (ratio) வெகு நேர்த்தியாக கணக்கிடப்பட்டு இன்னின்னாருக்கு இன்னின்ன பங்கு என்ற முறையில் சமீபகாலம் வரை செயல்பட்டுக்கொண்டிருந்தது. இப்பங்குகள் அவரவர் வம்ச வாரிசுகள் அனுபவிக்கவும் வகை செய்யப்பட்டது. இந்தப் பங்குதாரர்களே (ஸ்தானத்தார் தவிர்த்து) காலாகாலத்தில் மிராசுகள் என அழைக்கப்பட்டனர். இந்த மிராசுகள் கூட்டத்தால் பிரசாத விநியோகம் என்பது ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளாகவே ஒரே சம்பிரதாயத்தில் வந்து சமீபத்தில் மிராசுகள் என்ற கூட்டதால் நின்று போனது பின்னர் திருப்பதியில் 1979-80 இலிருந்துதான் இலவசப்பிரசாதம் எல்லா பக்தருக்கும் வழங்கவேண்டும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது. ஆனால் இந்த பிரசாத அளவு சட்டப்படியாகவும் சம்பிரதாயம் மீறாமல் இருக்கவேண்டுமே. ஆகையினால் ஸ்தானத்தார் அதாவது திருமலை தேவஸ்தானத்துக்கு உண்டான பங்குகள் அனைத்தும் இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தனர். திரு பி.வி.ஆர்.கே. பிரசாத் என்னும் செயல் அதிகாரிதான் இதை செயல்படுத்தினார். 


முதலில் சின்ன அளவில் (கடலை உருண்டை அளவில்) லட்டுகள் செய்யப்பட்டு அவை பிரசாதமாக இலவசமாக தரிசனம் முடிந்த பக்தர் ஒவ்வொருவருக்கும் தலா ஒன்று என அளிக்கப்பட்டது. ஆனால் இவை போதவில்லை.. எல்லா பக்தர்களுக்கும் லட்டு இலவசமாக அளிப்பது கடினமாக இருந்தது. ஆகையினால் தேவஸ்தான அதிகாரிகள் மற்ற பிரசாத பங்குதாரர்களையும் தங்கள் பங்குகளை வெளியே விற்காமல் தேவஸ்தானத்துக்கே விற்று விட ஆலோசனை சொன்னார்கள். ஆனால் அது செயல்பாட்டில் வருவது பெரும் சிக்கலாகப் போனது. இதன் மத்தியில் ஆட்சிக்கு வந்த நடிகர் என். டி. ராமராவ் 1987 ஆம் ஆண்டு இந்த மிராசு பங்குதாரர் முறையையும், அந்த பிரசாத பங்குகள் விற்பனையையும் முற்றிலும் ஒரு அரசு ஆணை மூலம் தடை போட்டார். ஆனால் இதை எதிர்த்து பிரசாத பங்கு மிராசுதார்கள் நீதிமன்றங்களை அணுகினார்கள். ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.பி. 1495 ஆம் ஆண்டு பிரசாத விற்பனைக்கு ஆதரவாக அந்த மாநிலத்து ராஜா கல் சாஸனம் மூலமாக உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவின் ஐந்நூறாவது ஆண்டு முடிந்தவுடன் இன்னொரு உத்தரவு சரியாக 1996 ஆம் ஆண்டு இன்றைய சுப்ரீம் கோர்ட், (ஜஸ்டிஸ் ராமசாமி) இந்த பிரசாத பங்கு விற்பனையை உடனடியாக நிறுத்தாவிட்டாலும் ஒரு ஒழுங்குமுறையோடு, வாழும் பங்குதாரர்களுக்கு இரு சில உரிமையுடன் விட்டுக்கொடுத்து, அதே சமயம் அவர்கள் வம்சத்தாருக்கு பிரசாதத்தில் இனி எந்த உரிமையும் இல்லையெனவும், சிறிது காலம் கழித்து இந்த பிரசாத பங்கு விற்பனையை முற்றிலுமாக நிறுத்தப்பட வழி வகை செய்யும் ஒரு தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் தற்சமயம் பங்குகள் பெறும் மக்கள் இனி தம் வம்சத்தார் மூலம் அந்தப் பங்குகளை நீட்டிக்கமுடியாது. இதை மிராசுதார்கள் சம்பிரதாயத்தை மீறும் செயல் என்றும் இந்த முடிவான தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மறுபடியும் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார்கள். இந்த வழக்கு இன்னமும் நிலுவையில்தான் உள்ளது என்றாலும் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே விதித்த தீர்ப்புக்கு எதுவும் தடையில்லை.


இப்படி லட்டு பிரச்சனை இருந்தாலும் வேங்கடவனுக்கு அன்று முதல் இன்று முதற்கொண்டு ஒரே ஒரு பிரசாதம் மட்டுமே அவன் திரு உருவச்சிலை முன்னே காணப்படும் ’குலசேகரப்படி’ தாண்டி செல்லும் உரிமை பெற்றது. அது வெண்பொங்கல்தான். கி.பி. 966 இலிருந்து இவ்வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருவதாக சொல்கிறார்கள். பொங்கல் அளவு இரண்டு படி (அதாவது நான்கு நாழி அல்லது நாழி) அதை தினமும் புதிய பானையில் வடித்து, அதை இரண்டாக உடைத்து, மேல் பாகத்தைத் தூர எறிந்து, பொங்கலுடன் உள்ள கீழ்ப்பாக ஓடு மட்டும் உள்ளே பிரசாதமாகப் போகும். ஏனைய பிரசாதங்கள் எல்லாம் குலசேகரப்படிக்கு முன்பு வைக்கப்பட்டு நிவேதனம் செய்யப்படும். இப்போது மிகப் பிரமாதமாகப் போற்றப்படும் லட்டு உட்பட அனைத்துப் பிரசாதங்களுக்கும் இதே நிலைதான். ஏறத்தாழ 1050 வருடங்களாக இதே சம்பிரதாயம் கட்டாயமாக்கப்பட்டு இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. 1445-ம் ஆண்டு சுசியம் என்ற பிரசாதமும், 1455-ம் ஆண்டு அப்பமும் 1460-ம் ஆண்டு வடை பிரசாதமும், 1468-ல் அதிரசமும், 1547-ல்மனோகரபடியும் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த பிரசாதங்கள் ‘திருபொங்கம்’ என அழைக் கப்பட்டது. திருமலை திருப்பதி வேங்கடவனுக்கு 1715 ஆகத்து 2 முதல் முகலயரின் இனிப்பு பண்டமான லட்டை பிரசாதமாக படைப்பது துவங்கியது. 1803 இல் இருந்துதான் வடை போன்ற பிரசாதங்களை மதராஸ் அரசு பக்தர்களுக்கு விற்கும் முறை கோயிலில் தொடங்கியது. ஆனால் அப்போது இனிப்பு பிரசாதமாக பூந்தி வழங்கப்பட்டது. பின் 1940 முதல் பூந்திக்கு பதில் லட்டை பிரசாதமாக வழங்கத் துவங்கினர் 1940-களில் விநியோகம் செய்யப்பட்ட லட்டு பிரசாதங்கள் கல்யாண உற்சவ லட்டு போன்று பெரிய அளவில் இருந்தன. அந்த காலகட்டத்தில் இவை 8 அணாவிற்கு விற்கப்பட்டன. பின்னர் இவை படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு இன்று ரூ.25 க்கு பக்தர்கள் கைகளில் மகாபிரசாதமாக கிடைக்கிறது.



தற்போதைய விலை விவரங்கள்:
* 25 ரூபாய்க்கான லட்டை, 200 எண்ணிக்கைக்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு 50 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.
* 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் கல்யாண உற்சவ லட்டை, 10 எண்ணிக்கைக்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு 200 ரூபாய்.
* 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வடையை 10 எண்ணிக்கைக்கு மேல் வாங்கினால் ஒரு வடை 100 ரூபாய்.
* 3.50 ரூபாய்க்கு விற்கப்படும் சிறிய லட்டை 1000 எண்ணிக்கைக்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு 7 ரூபாய்.



வேங்கடத்தானின் நகையை பராமரிக்க பிரசாத வியாபரம் துவங்கியது. இன்று அவனின் தங்க வைடூரிய நககளை காணோமாம். திருப்பதியானுக்கே மொட்டையா?

Anantha Subramonian Posted by Anantha Subramonian

Anantha Subramonian

views: 3251