சுசீந்திரம் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!

சுசீந்திரம் பழையாற்றில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பழையாற்றின் கரையில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை , பெருஞ்சாணி அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பிவிட்டன. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது .எனவே பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கன்னியாகுமரி மாவட்ட அரசு நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
சுசீந்திரம் பழையாற்றின் கரையோரமாக உள்ள கவிமணி நகர் ,ஆஞ்சநேயர் நகர், சாஸ்தா நகர், ஆசாத் நகர், சபரீஸ் நகர் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . தற்போது பழையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு முழுவதும் மழை பெய்யும் பட்சத்தில் ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுசீந்திரம் பஞ் நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அகஸ்தீஸ்வரம் தாசில்தார் தலைமையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .மேலும் சுசீந்திரம் புறவழிச்சாலையில் தண்ணீர் செல்லும் விதத்தில் ரோட்டை வெட்டி விடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலிஸ் சார்பிலும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Ram Thangam Posted by Ram Thangam

Journalist

views: 1905