For Advertising... Please Contact - 9940542560

நொறுக்குத்தீனி பிரியர்கள்...

   1  |   
நானும் என் நண்பர்களும் சிறுவயதில் நொறுக்குத்தீனி பிரியர்கள். நாகர்கோவிலில் எந்தெந்த இடங்களில் எப்போது நல்ல சுவையான சூடான (குடமிளகாய்) வடை, குமரிமாவட்ட ஸ்பெசல் ரசவடை (பருப்புவடையில் செய்வது), வாழைக்காய் பஜ்ஜி (பெருங்காய வாசனையுடன்), பருப்புவடை, உள்ளிவடை எனப்படும் வெங்காய வடை, நேந்திரம்பழ அப்பம், குளிர்காலத்தில் காரமான சுக்கு காப்பி, கைமுறுக்கு இத்யாதி இத்யாதி.
நாகர்கோவில் கணேசபுரம் இறக்கத்தில் ஒரு சிறிய கடையில் ஒரு ரூபாய்க்கு சூடான பருப்புவடை போன்ற பலகாரங்கள் தனிச்சிறப்பு. மணிமேடையில் ஆசாத் ஹோட்டலில் மாலைநேரம் தேநீர்-மட்டன் கட்லெட் காம்பினேஷனையும் விடுவதில்லை. வடிவீஸ்வரம் கோவிலுக்குப்பக்கத்தில் ஒரு மிகச்சிறிய கடையில் கையளவு சின்ன சின்ன கல் தோசையும் சட்னியும் சிறப்பு.

இதே சிறிய கல்தோசையை ஈசாந்திமங்கலத்தில் நண்பன் அணஞ்சபெருமாள் வீட்டிலிருந்து மாலைவேளைகளில் திட்டுவிளை வரை நடந்து சென்று அங்கு திட்டுவிளை-பூதப்பாண்டி சந்திப்பில் ஒரு ஓலைக்கூரை கடையில் உண்டதை இன்னும் மறக்கவில்லை. அதுபோல, மணத்திட்டை தியேட்டருக்கு முன் ஒரு சிறிய ஓலைக்கூரை கடையில் அணஞ்சபெருமாளுடன் காரமான நாட்டுக்கோழி கறியும் ஆப்பமும் உண்டதும் நினைவை விட்டு அகலவில்லை. வேப்பமூடு சந்திப்பில் இந்தியன் காப்பி ஹவுஸ் ஐஸ் காப்பி, மசாலா தோசை, ஆகியவையும் சிறப்பு தான்.
அது ஒரு கனாக்காலம். கையில் யாரிடமாவது காசில்லாவிட்டாலும் க்ரூப்பில் மற்றவர்கள் ஷேர் செய்தார்கள். ஆகவே குறைவில்லை.
நம்மூரில் ஏதாவது உணவு ஐட்டங்கள் இங்கே விட்டுப்போயிருந்தால் நண்பர்கள் குறிப்பிடலாமே?

Courtesy: Jamaludheen Masthankhan

   1  |   

Other Pages