
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து பல பெரிய ஓடைகள் ஒன்றாகக் கலந்து பெருஞ்சாணி அணைக்கட்டு வழி பழையாறு குமரிமாவட்டத்தில் பல கால்வாய்களாக பிரிந்து பறந்து செல்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைகள் வழியாக பழையாறு 34.91 கிலோ மீட்டர் தூரம் ஓடி மணக்குடியில் அரபிக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் மூலம் சுமார் 15821 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.பழையாற்றின் வழியாக தண்ணீர் பெறும் குளங்களின் எண்ணிக்கை 97. பழையாற்றின் கிளை கால்வாய்களின் எண்ணிக்கை 13.தமிழகத்தில் மழை பெய்கின்ற வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவகாலங்களில் பழையாற்றில் தண்ணீர் ஓடும்.பண்டைய காலங்களில் மக்கள் பழையாற்று நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தினர்.
தற்போது மக்களின் கவனக் குறைவால் பழையாறு மிகவும் மாசுஅடைந்துள்ளது.நாகர்கோவில் நகரத்தின் சாக்கடையை பழையாற்றில் எந்த வித குற்ற உணர்ச்சியும் இன்றி கலக்கின்றனர். பல திருக்கோயில்களில் சுவாமி அபிஷேகத்துக்கும் இந்த ஆற்று நீரை தான் பயன்படுத்தி வந்தனர்.
இப்போதும் பல திருக்கோயில்களில் இருந்து சுவாமி ஆறாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பழையாற்றில் வைத்து பூஜைகள் செய்யப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது. பல இடங்களில் பழையாற்றின் நடுவில் மண் திட்டுகளும் , இரு பகுதியில் செடிகொடிகள் வளர்ந்தும் நிற்கின்றன. பொதுமக்களும் மரங்கள் , செடிகள் நட்டு ஆக்ரமித்தும் கொண்டனர்.அதனால் பழையாற்றின் அகலம் குறைக்கப்பட்டு நீர் பிடிப்பு பகுதிகளும் குறைந்து விட்டன. பழையாற்றில் மண் நிரம்பியுள்ளதால் ஆழம் குறைந்து நீரோட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் பழையாறு தடம் இல்லாமல் மறைந்து போகும் சூழல் உருவாகி விட்டது.


Posted by