மாத்தூரில் தொட்டிப்பாலம் அமைத்த பாரதரத்னா காமராஜர்!


ஆற்றைக்கடக்க பாலம் கட்டுவார்கள். ஆனால் ஒரு நீர்நிலையை கடக்க இன்னொரு பாலம் கட்டுவார்கள் என்றால்.. அதாவது ஒரு நீர் நிலையை இன்னொரு கால்வாய் கடக்கிறது என்றால் ஆச்சரியம்தானே.. கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்பட்டணம், கருங்கல், புதுக்கடை ஆகிய பூமி அடிப்படையில் மேடான பகுதி. இங்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபோது இது அவரது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி சிற்றாறு அணையில் உள்ள தண்ணீரை கால்வாய் மூலமாக இந்தபகுதிகளுக்கு கொண்டு வரத்திட்டமிடப்பட்டது. குறுக்கிட்டது பரளியாறு. மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கனியான் பாறை என்ற மலையும், கூட்டுவாவுப்பாறை என்ற மலையையும் இணைத்து இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது தான் இந்த மாத்தூர் தொட்டிப்பாலம். இரண்டு மலைகளையும் இணைக்கும் இந்த இந்த பாலம் 1240 அடி நீளமும், தரை மட்டத்திலிருந்து 104 அடிஉயரத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 28 தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் 16 சதுர அடி சுற்றளவு கொண்டவை. தண்ணீர் கொண்டு செல்லும் சிலாப்புகள் தொட்டி வடிவில் உள்ளதால் தொட்டிப்பாலம் என பெயராம். தண்ணீர்செல்லும் தொட்டிகள் 8 அடி உயரம் கொண்டவை. 5 அடி உயரத்தில் தண்ணீர் சென்றுகொண்டிருக்கும். 104 அடிக்கு கீழே பரளியாறு ஓடிக்கொண்டிருக்கும். தொட்டிப்பாலத்தின் இன்னொரு பகுதி நடைபாதையாக பயன்படுகிறது.

இந்தபாலம் ஆசியாவிலேயே மிகப் பெரிய தொட்டிப்பாலம். இந்த பாலம் சர்வதேச அளவில் அனைவரின் பார்வையை கவர்ந்து இபபோதும் அற்புதமாக காட்சி அளிக்கிறது.

இந்த தொட்டிப்பாலத்தின் மூலம் குமரிமாவட்டத்தின் ஒரு பகுதியினர் விவசாயமும், குடிநீர்தேவையும் பூர்த்தியாகிறது.

காமராஜரின் தொலைநோக்குப்பார்வை காரணமாகவே இந்த பாலம் இங்கு அமைந்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தை செழிப்புடன் வைத்திருக்கிறது.


காலம் உள்ளவரை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் காமராஜரை மறக்க மாட்டார்கள்!

ஓங்குக அவரது புகழ்!


Photo taken by Abishek M S

திருவட்டாறு சிந்துகுமார் Posted by திருவட்டாறு சிந்துகுமார்

Reporter at Kumudam No.1 Tamil Weekly

views: 8997
   2

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs