Jackson Herby Photo Exhibition - Chennai Press Club
நாகர்கோவில் புத்தேரியைச்சேர்ந்த ஜாக்சன் ஹெர்பி வர்மக்கலை ஆசானின் பேரன். சுறு சுறுப்பான இளைஞர்.
இவர் போட்டோகிராபியை சென்னையில் உள்ள ஜாம்பவான்கள் சிலரிடம் கற்றார். சிலர் இவருக்கு படம் எடுக்கும் டெக்னிக்குகளை கேட்டால் சொல்லித்தராமல், அவமானப்படுத்தியும் உள்ளனர். இதனால் இவராகவே முனைந்து முனைந்து புகைப்படம் எடுக்கும் நுட்பங்களைக்கற்றுத்தேர்ந்துள்ளார்.பின்னர் ப்ரீலான்சராக பத்திரிகைகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு படம் எடுத்து வந்தார்.
ஒரு முறை நண்பரிடம் கேமராவை இரவல் கேட்டபோது அவர் மறுக்கவே வீட்டில் வந்து கண்கலங்கி அழுவதைப்பார்த்த இவரது தந்தை, புத்தேரியில் உள்ள ஒரு செண்ட் நிலத்தை விற்று இவருக்கு கேமரா வாங்கிக்கொடுத்ததை, சமீபத்தில் இவரது தந்தை இறந்த போது ஆறுதல் சொல்ல சென்றிருந்த வேளையில் நா தழு தழுக்கக்கூறினார்.
வித்தியாசமான புகைப்படங்கள் எடுப்பதில் வல்லவர். போட்டோ எடுக்க ரிஸ்க் எடுக்கத்தயங்காதவர். தினகரனின் கரன் டிவி, சென்னை தினத்தந்தி என பணியாற்றி விட்டு தற்போது நாகர்கோவில் தினமுரசு நாளிதழில் போட்டோகிராபராக பணியாற்றுகிறார். அத்துடன் பிடிஐ நிறுவனத்தில் புகைப்பட பங்களிப்பாளராகவும் உள்ளார்.
ஓஹி புயலின்போது இவர் ஓடி ஓடி எடுத்தப்படங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ், ஆங்கிலம்,மலையாளம், கன்னடா, இந்தி என பல்வேறு மொழி இதழ்களில் வெளியானது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை கன்னியாகுமரியில் முன்னாள் அமைச்சர் பொன்னார் கரைக்க கடலில் இறங்கியபோது, இவரும் கேமராவுடன் கடலில் நிகழ்ச்சியை வித்தியாசமான கோணங்களில் படம் எடுத்தார்.
சமீபத்தில் துக்ளக் வார இதழ் உதவி ஆசிரியர் போனில் தொடர்புகொண்டு,”ஒரு நிகழ்ச்சிக்கு நல்ல போட்டோகிராபர் ஒருவரை ஏற்பாடு செய்ய முடியுமா?” எனக்கேட்டார். உடனே நான் ஜாக்சன் ஹெர்பியை கை காட்டினேன். அவர் எடுத்த படங்கள் அருமையாக துக்ளக் இதழில் வெளியானது. குமுதம் ரிப்போர்டர் இதழிலும் இவர் எடுத்த படங்கள் வெளியாகி உள்ளது. கல்கி வார இதழில் இவரது புகைப்பட ஆல்பம் வெளியாகி பலரது பாராட்டைப்பெற்றது.
ஜாக்சன் ஹெர்பியின் புகைப்படக் கண்காட்சி வரும் 13.ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. தமிழக அரசு பத்திரப்பதிவுத்துறை ஐஜி திருமதி பி. ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ். அவர்கள் புகைப்படக்கண்காட்சியைத்திறந்து வைக்கிறார். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கண்காட்சியைக் கண்டு இன்புறுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பின்குறிப்பு 1. ஜாக்சன் ஹெர்பி தற்போது கீழடியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். இவரது கேமரா பார்வையில் பதிவான கீழடி படங்கள் சிலவற்றைப்பார்த்தேன். இப்படியும் படங்கள் எடுக்க முடியுமா? என்ற பிரமிப்பை என்னுள் ஏற்படுத்தி விட்டது. புகைப்படக்கண்காட்சியின் ஹைலைட்டாக இவரது கீழடி படங்கள் இருக்கப்போகிறது என்று என்னால் அடித்துச்சொல்லமுடியும்.
பின் குறிப்பு 2 :நானும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். புகைப்படக் கண்காட்சியில் நேரில் சந்திக்கலாம்.
அன்புடன்,
திருவட்டாறு சிந்துகுமார்
Photo Credits: Jackson Herby & திருவட்டாறு சிந்துகுமார்
2 | 2k views