Leepuram

'இளந்தோப்பு' தென்னை மரங்கள் சூழ்ந்த பகுதி இது. சின்ன முட்டத்திற்கு வடக்காக அமைந்திருக்கிறது.கன்னியாகுமரி விவேகானந்தா புரத்திலிருந்து இரண்டு கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது இந்த ஊர். 'லீ ஐயர்' என்கிற வெள்ளைக்கார போதகரின் வருகைக்கு பிறகு இங்கு சிறிய ஆலயம் ஒன்றினை நிறுவியதால், சீர்திருத்த கிருஸ்தவம் பரவி காணப்படுகிறது. லீ ஐயர் காலத்திற்கு பிறகு 'இளந்தோப்பு' இப்போது
'லீபுரம்' என்றழைக்கப்படுகிறது.

மீனவர்கள் குடியிருப்புகள் இல்லாத அழகிய கடற்கரை கிராமம்.பாறைகள் நிறைந்த பகுதி இது. ஐநூறு மீட்டர் தூரம் வெண்மணலாக விரிந்து கிடக்கிறது. சின்னசின்ன கிளிஞ்சல்களை எடுத்து கரைமுழுக்க போட்டு வைத்திருக்கிறது அலைகள்.
கடற்கரையில் வெகு காலங்களுக்கு முன்பு ஒரு சிறிய கலங்கரை விளக்கு இருந்தது,அது சரியான பராமரிப்புகள் இல்லாமல் சிதிலமடைந்து பாழ்பட்டு போனது.தற்போது 'இன்டாக்ட்' என்கிற தொண்டு நிறுவனம் அந்த இடத்தில் ஒரு கலங்கரை விளக்கினை கட்டி வைத்திருக்கிறது. அதனை நாம் தூரத்தில நின்று பார்த்தால் நன்கு வளர்ந்த 'மாடனைப்' போல காட்சி தருகிறது.

வெகு நாட்களுக்கு முன்னர் அந்த கடற்கரைக்கு நான் போயிருந்த போது கப்பல் ஒன்று கரை தட்டி நிற்பதை காணமுடிந்தது. நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் அது,அதன் கொடிமரம் மட்டும் வெளியில் தெரிவது மாதிரி இருந்தது பின்னர் அடித்த ஓக்கி புயலுக்கு பிறகு அந்த கப்பலின் எல்லா பாகங்களும் இப்போது முழுமையாக மூழ்கிப்போனது.

தற்போது கடற்கரையில் பெரிய பாறாங்கற்களை எல்லாம் கொண்டுவந்து கொட்டி கடற்கரை தடுப்புச்சுவர்களை உருவாக்கி வைத்துள்ளனர் ,இப்போது மிஞ்சியிருப்பது இருநூறு அடி கடற்கரை மட்டுமே. வெகுஜன மக்களின் கலாச்சாரநிகழ்வான 'திதீ' மற்றும் ஆடி அம்மாவாசை போன்ற தர்ப்பண நீராடல்களின் போது விட்டு விட்டு செல்கிற துணிகள் கரைமுழுக்க இரைந்து கிடக்கிறது.

இனும் சில காலங்கள் போனால் நாம் மிக எளிதாக இந்த கடற்கரையினை காண போக முடியாது,காரணம் வி.வி. மினரல்ஸ் அரிய வகை மணல்களை பிரித்தெடுப்பதற்காக இந்த பகுதியையே வளைத்து போட்டிருக்கிறார்கள்.

காடு எப்படி வனத்தில் வசிக்கிற ஆதிவாசிகளால் பேணி காப்பற்ற படுகிறதோ, அதுபோல மீனவர்கள் அங்கு வசித்தால் மட்டுமே கடற்கரையினையும் காப்பாற்ற முடியும். பன்னாட்டு கம்பனிகளுக்கும் கேளிக்கை விடுதிகளுக்கும் சாகர்மாலா திட்டத்தின் கீழ் கடற்கரை தாரைவார்க்கப்பட்டு, இறுதியில் கடல்கரையிலிருந்து மக்கள்அகதிகளாக துரத்திவிடப்படுவார்கள் ஒருநாள்.

Courtesy: Jawahar Clicks