பகவதி அம்மன் கோவில் - பரிவேட்டை திருவிழா


முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அன்னதானம், வாகனபவனி, நாதஸ்வர கச்சேரி, பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

10-ம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) முக்கிய நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.



அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது.

அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு அம்மன் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்காக மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.

இந்த ஊர்வலத்திற்கு முன்னால் பஜனை குழுவினர் அலங் கரிக்கப்பட்ட ரதத்தில் பஜனை பாடி சென்றனர். அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் சங்கம் சார்பில் நெற்றிப்பட்டம் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட 3 யானை களின் மீது பக்தர்கள் முத்துக்குடை பிடித்தபடியும் பகவதிஅம்மன் உருவ படத்தை தாங்கியபடியும் அணி வகுத்து சென்றனர். அதைத் தொடர்ந்து 3 குதிரைகளில் பக்தர்கள் வேடம் அணிந்து சென்றனர்.

ஊர்வலத்தில் பெண் பக்தர்கள் கேரள உடை அணிந்து முத்துக்குடை பிடித்து அணிவகுத்து சென்றது பார்ப்பவர்களை கவர்வதாக இருந்தது. மேலும் இந்த ஊர்வலத்தில் 500--க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குபெறும் நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம், பொம்மலாட்டம், கடுவாய்ப்புலி ஆட்டம், செண்டை மேளம், தப்பாட்டம், மயிலாட்டம், குயிலாட்டம், பேண்டு வாத்தியம், நாதசுவரம், பஞ்ச வாத்தியம், பறை ஆட்டம், கேரள புகழ் தையம் ஆட்டம், சிங்காரி மேளம், பூக்காவடி, அம்மன் வேடம் அணிந்த பக்தர்களின் நடனம் போன்றவைகளும் இடம் பெற்றன.


அம்மன் எழுந்தருளி இருக்கும் வாகனத்தின் முன்னால் கோவில் பரம்பரை தர்மகர்த்தாக்கள் கோட்டாரை சேர்ந்த சுப்பிரமணியன் பிள்ளை கையில் வாள் ஏந்தியபடியும், அதன் பிறகு சுண்டன்பரப்பு குமரேசன் வில்-அம்பு ஏந்தியபடியும் நடந்து சென்றனர். அதன் பின்னால் பகவதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத் தில் பவனி சென்றார். அம்மன் பரிவேட்டைக்கு எழுந்தருளி செல்லும் போது வழி நெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சம்பழம் மாலைகள் அணிவித்து தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர். விழாவில் அதிமுக ஒன்றிய செயலாளர் பொறுப்பு அழகேசன், மணியா கேட்டரிங் கல்லூரி நிறுவன தலைவர் கோபாலகிருஷ்ணன், திமுக ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி, கன்னியாகுமரி மாவட்ட சிவசேனா தலைவர் பா ராஜன் அகத்தியர் பேரவை நிர்வாகி வைகுண்ட பெருமாள், பகவதி அம்மன் கோயில் பக்தர்கள் சங்க தலைவர் வேலாயுதம், செயலாளர் முருகன், வக்கீல் அசோகன், வக்கீல் ராஜேஷ், கன்னியாகுமரி சிவசேனா நகர தலைவர் சுபாஷ், ஹரிகிருஷ்ணபெருமாள், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பிரேமலதா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த பரிவேட்டை ஊர்வலம் சன்னதி தெரு, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி, வடக்கு தெரு, மெயின்ரோடு, ரெயில்நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம் சந்திப்பு, மகாதானபுரம் தங்கநாற்கர சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது.

அங்கு அம்மன் பாணா சுரன் என்ற அரக்கனை வேட்டையாடி வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து வாண வேடிக்கை நடக்கிறது. இந்த வேட்டை நிகழ்ச்சி நடந்ததும் மகாதானபுரம் கிராமத்தில் பக்தர்களுக்கு காணக்கஞ்சி தர்மம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து அம்மன் காரியக்கார மடத்துக்கு சென்று விட்டு அங்கு இருந்து வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.


இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் வருடத்திற்கு 5 விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. முத்துபாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பெண் போலீசாரும் போக்குவரத்து போலீசாரும் ஊர்காவல் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மேலும் கன்னியாகுமரியில் போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டு இருந்தது.

விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் மற்றும் அஞ்சுகிராமத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டன.

விழாவையட்டி கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது. கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக ஊழியர்கள், விவேகானந்தர் நினைவு மண்டப ஊழியர்கள் பரிவேட்டை திருவிழாவில் பங்கேற்க வசதியாக இன்று பகல் 12 மணிக்கு மேல் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி , நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் ஜீவானந்தம் , கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன் , கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீ ராமச்சந்திரன் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

 

News Discussion

Leave a Comment

Note: HTML is not translated!