For Advertising... Please Contact - 9940542560

மணிக்கட்டி பொட்டலில் கொராணா...

     |   

மணிக்கட்டி பொட்டலில் கொராணா என்றவுடன் தலையில் இடி இறங்கியது மாதிரிதான் உணர்ந்தேன். அந்த அதிகாலை வேளை நான் அங்கு பொன்னீலன் அண்ணாச்சியின் வீட்டில் தான் பேசிக்கொண்டு இருந்தேன்.

பேரிகார்டு போட்டு ஊரையே அடைத்து போலீஸ் காவல் ஏற்படுத்திவிட்டார்கள்,இனிமேல் அவர்களுக்கு எப்படி உதவிடமுடியும் என்று ரெம்பவே குழம்பி போனேன். பஞ்சாயத்து மூலம் அங்குள்ளவர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்றதும் கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது.காய்கறிகள் மற்றும் பால் இவற்றை மட்டுமே விலைக்கு வழங்குவார்கள்.

நோய் எதிர்ப்பு வழங்கும் பழவர்க்கங்கள்,சத்து பாணங்களான ஹார்லிக்ஸ் போன்ற மிக தேவையானவற்றை யார் வழங்குவார்கள்.
மேலும் வயதானவர்களுக்கான மருந்து மாத்திரைகள், மாதாந்திர செக்கப், இது போன்ற விசயங்களெல்லாம் முடியாமல் முடங்கிவிடும்.

அதிலும் உதவிக்கு யாருமில்லாமல் வயதானவர்கள் வீட்டில் மாட்டிக்கெள்வதை கற்பனை செய்து பாருங்கள். ஊரே முடக்கப்படுவது மிகக் கொடுமையானது.

நான் இன்னொரு கோணத்தில் யோசித்து கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் மிக சொஸ்த்தமாக, பாதுகாப்பாக,பரிசுத்தமாக வெளிஆட்களின் தொடர்பற்று தனியாக இருக்கிறார்கள். நான் உதவி செய்கிறோம் என்கிற விசயமாக அவர்களை காண செல்வது அவர்களுக்கு இடைஞ்சலாக உபத்திரவமாக மாறிவிடக்கூடாதே என மனதில் வேண்டிக் கொண்டேன்.

கொராணா பரவல் என்பதனை நாம் கணிக்க இயலாதது.நானோ ஊர்சுத்தி திரிகிறவன். ஆனாலும் இந்த வயதான இருவருக்கும், என்னைத்தவிர யார் இந்த ஊரடங்கில் அவர்களுக்கு உதவிட முடியும்.

காக்கா உக்கார பழம் வீழ்ந்தது மாதிரி மிக வேண்டிய நண்பர் தொலை பேசியில் விசாரித்தார். அண்ணாச்சிக்கு எந்த கடையில் பொருட்களை வாங்கி சென்றீர்கள் என்ற கேள்வியை தொடுத்தார், ஏன் ஏன்ன பிரச்சினை என்றேன்.

ஒரு குறிப்பிட்ட கடையினை சொல்லி அந்த கடைகாரர்க்கு கொராணாவாம் என்றார். நான் அங்கு பொருட்கள் வாங்குவது கிடையாது. ஆனாலும் மனதில் பகீரென்றது,ஏதாவது ஆகிவிட்டால் எல்லாவற்றையும் நான் காரணமாகிவிடுவனோ.ஏதுவும் நடக்காது இறைவன் இருக்கிறான் ஒருவழியாக மனதை தேற்றிக் கொண்டேன்.

நேற்று அண்ணாச்சியிடமிருந்து அழைப்பு வந்தது...அடேய் என் நினைச்சிட்டு இருக்கீங்கப்பா? நானெல்லாம் சாப்பிட வேண்டாமா? 'நோயைவிட பசியல்லவா பயங்கரமா இருக்கு'

முழுநிள லிஸ்டை வாசித்தார்கள்.பொருட்களோடு மணிக்கெட்டி பொட்டல் ஊர்வாசலில் நின்றோம் தம்பி பிரபு தர்மராஜூம் நானும்.ஊர் வாசல் மறிக்கப்பட்டு ஆளரவமற்று அடங்கி கிடந்தது.உயர்ந்த ஆலமரம் காற்றில் ஒருவித ஹோய்... என்கிற மாதிரி அகங்கார சப்தத்தோடு வேறு வீசியது.

அங்கிருந்த போலீஸ் ஆதிகாரியிடம் விபரத்தை எடுத்து சொன்னோம்.ஒரு ஈ காக்க குஞ்சு உள்ளே நுழையமுடியாது வெளியிலும் வரமுடியாது என்று முகத்தில் ஒருவித இறுக்கம் காண்பித்தார்.

போலீஸ் அதிகாரி தொலைபேசியில் யாரையோ அழைத்து எங்களைபற்றி விபரங்களை சொன்னார். முகம் கடுப்பென்றாலும் அகம் ஈரமானது.சற்று நேரத்தில் ஊர் பஞ்சாயத்து தலைவர் வந்து சேர்ந்தார். பெருட்களை எங்களிடம் தாருங்கள் நாங்கள் அவர்களிடம் சேர்த்துவிடுகிறோம் என்று உறுதியளித்தார்.

இப்போது நாங்கள் கொண்டு சென்ற பைகள் வேறு ஒருவர்கைகளில் மாறியிருந்தது. தூரத்தில் அண்ணாச்சியின் வீடுவரை அந்த பைகள் புள்ளியாக மறைகிறவரை பார்த்து கொண்டே நின்றோம், அந்த பைகளின் உள்ளே எங்களது ஆதீத அன்பெல்லவா இருக்கிறது.

அண்ணாச்சியிடமிருந்து அழைப்பு வந்தது
எப்பா...
ரெம்ப நன்றி...
ரெம்ப நன்றி...

பொருட்களை எடுத்துக்கொண்டு அந்த பைகளை வருகிறவரிடம் கொடுத்து தூர எறிந்துவிட சொல்லுங்கள் என்றேன்.


கொராணா மனிதர்களை பிரிக்கப் பார்க்கிறது. வட்டங்களுக்குள் நிற்க சொல்லுகிறது. 'சமூக விலக்கம்' என்கிற பதம் அபத்தமாக மாறிவிடக்கூடிய எல்லா சாத்தியங்களும் உள்ளது.

     |