For Advertising... Please Contact - 9940542560

நாவுகள் அபாரமானவை...

Prabhu Dharmaraj  |        |   

Photo Credits: tonytthomas

‘புட்டு அவிச்சி வச்சிருக்கேன், சாப்புட வாயாம்டே!’ என்ற குரல் அம்மாவிடம் இருந்து போனில் எழுந்தபோது சற்றைக்கெல்லாம் அடுத்த தெருவில் இருக்கும் பிறந்தவீடு செல்ல தீர்மானித்து போயாகிவிட்டது. தாயார் சேரில் அமர்ந்து 'வகைக்கு உதவாத சேனல்' ஒன்றின் 'குடும்பம் கலக்கி' சீரியல் பார்த்துக் கொண்டிருக்க, பத்தடி தூரத்தில் தகப்பனார் அமர்ந்து உள்ளி உரித்துக் கொண்டிருந்தார்.

“சந்தோசமா இருக்காவளே ! நா அங்க கெடந்து வெளக்கு மாத்தடியும், வெறவுக்கட்ட அடியும் வாங்கிட்டு கெடக்கேன் , ஒனக்கு சீரியல் பாத்து இளிப்பு வேண்டி கெடக்கு? ”

வயித்தெரிச்சல் வாய்க்குள் தீயைப் பாய்ச்ச, நாவில் அமர்ந்திருந்த நாரதன் உயிர்தெழுந்தான். “ஒத்துமையா இருக்க வுடப்புடாது...” மனம் கொந்தளித்ததில் வார்த்தைகள் வந்து விழுந்தன.

ஏம்மா! நீ உள்ளிய உரிக்கப்புடாது? ரிட்டயர்டான காலத்துல அந்த மனுசன போட்டு கஷ்டப்படுத்துகியே?

என்றதற்கு டிவியில் இருந்த கண்களை எடுக்காமல் வந்த பதில்,

ஹாட் பாக்ஸுல புட்டும், கேஸ் ஸ்டவ்வுல இருக்குற மண்சட்டியில கொண்டக்கடலயும் இருக்கு! முழுங்கு !

இவர்கள் இப்படித்தான்! நாங்கள் பிறந்ததிலிருந்து சண்டையிட்டுக் கொண்டதை நான் பார்த்ததேயில்லை. பலமுறை கோள்மூட்டி விட்டு பெகளத்தை இழுத்து விட்டாலும் கூட ஆட்டோமேடிக் கதவு மாதிரி பழைய பொசிஷனுக்கு வந்துவிடுவார்கள். என்ன எழவு டிசைனோ?

புட்டும், கொண்டைக்கடலையும் வயிற்றுக்குள் போனதில் வயிறு சாந்தமடைந்தாலும் மனம் ? ம்ஹூம் !

எப்பா ! ஒங்கம்ம உயிரோட இருந்துருந்தா இந்த நெலம ஒங்களுக்குக் கண்டிப்பா வந்துருக்காது...
உள்ளி உரிக்கும் போது வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டே என்னைப் பார்த்தார்.

வாய வச்சிக்கிட்டு சும்ம கெடங்களாம்டே ! காலையிலயே லாத்திட்டு வந்துருகது?

நான் விடவில்லை, 'ஆச்சி இருக்கது வரைக்கும் கொஞ்சம் அம்மைக்கும் ஏந்தலாயிருந்தா ! இப்போ அதுவும் இல்ல ! மனசே பாரமா கெடக்கு !'

அப்பா அமைதியாக இருந்தார். உள்ளிகள் தங்கள் தோலை இழந்த வண்ணம் பாத்திரத்தில் வீசப்பட்டபோதுதான் அந்த வார்த்தைகள் அம்மாவால் வீசப்பட்டன...

யாரு ஒங்க ஆத்தாளா ? யாருக்கு ஏந்தலா இருந்தா ? எனக்கா ? பெட்டியில கொண்டுபோன வரைக்கும் சோத்துக்கு தெண்டமும், பூமிக்கு பாரமாத்தான் இருந்தா ! அவளால நாம்பட்ட சொளவடியும், மட்டயடியும் எனக்குத்தானே தெரியும் ? அவளப்பத்தி பேசாம போயிரு ! நா நானா இருக்க மாட்டேம் பாத்துக்கா !

ரைட்டு ! இன்ஜின் ஸ்டார்ட் ஆயிட்டு !

அப்பா திருவாய் மலர்ந்தார், அவளத்தான் கொண்டு போயி அடக்கியாச்சில்லா! இப்ப என்ன அவளுக்க பாட எடுக்கே ?

ஆமா ! அம்மைய சொன்னவொடனே ரோசம் பொத்துகிட்டு வந்துரும்! துப்புன குழிக்கி மண்ணள்ளிப் போட்டுருப்பாளா? அந்தப் பல்லிய தின்ன அன்னைக்கே செத்துருந்தான்னா நாந் தப்பிருப்பேன்...

ஒரு கிளைக்கதை : பானைக்குள் கிடந்த பல்லியின் பாடி

ஒரு சிறுவன் இரண்டாம் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தான். அது அறுவடை காலமானதால் மேற்பார்வைக்காக அவனது தாய் வயலுக்கு போயிருக்கிறாள். மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்து, பூனை மூடியைத் தட்டி விட்டதில் திறந்து கிடந்த சோற்றுப் பானையைப் பார்க்க, அதற்குள் ஒரு பல்லி ஒன்று நீச்சலடித்து செத்துக் கிடக்கவே, அருகில் கிடந்த உலை மூடியில் கரிக்கொட்டையினால் இவ்வாறு எழுதி விட்டு பள்ளிக்குச் சென்று விட்டான்.

“பானையில் பல்லி கிடக்கிறது!”

அந்தக்காலத்திலேயே ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் இரண்டாம் வகுப்புப் படித்திருந்த அவனது தாய் வீட்டுக்குத் திரும்பி பானை மூடியில் தன்னுடைய மகனின் முத்தான கையெழுத்தைச் சிலாகித்த படியே,

“எழவு பானைக்க மூடியில எழுதி வச்சிக்கிட்டு போயிருக்காம் பாத்தேளாய்யா! எழுத வேற எடமே கெடைக்காம! கொப்பன் தேட்டர் டிக்கெட் பெறையில பெஞ்சி வெலய எழுதிட்டு திரியான் ! மொவன் ஒல மூடியில எழுதிட்டு நடக்கான்”!

என்று கஞ்சியை ஊற்றிக் குடித்துவிட்டு மயங்கிச் சரிந்திருக்கிறாள். சிறுவனின் தகப்பன் தியேட்டர் ஒன்றின் அதிபதி. மதிய காட்சியைத் துவங்கி வைத்துவிட்டு வீட்டிற்கு சாப்பிட வந்தவர் தன்னுடைய மனைவியின் அனந்த சயனத்தைக் கண்டபடியே மூடியில் இருந்த வாசகத்தைக் கண்டு திகைத்து, ஆஸ்பத்திரிக்குத் தூக்கிப் போனார்கள். போகும் வழியில், ‘என்னய எங்க தூக்கீட்டு போறிய?’ என்று கேட்டபடியே விழித்தவளை மீண்டும் வீட்டுக்கே கொண்டு வந்தார்கள்.

பல்லிக்க வெசம் எனக்க மயிரக் கூட புடுங்காது ! என்றொரு நிலைப்பாட்டை அவள் எடுக்க அந்த நாள் உகந்ததாக இருந்தது.

அன்றொரு மிகப்பெரிய எச்சரிக்கை வாசகத்தை கல்வெட்டில் பொறித்து வைத்த மகானை இந்தப் பொல்லாத காலம் உள்ளியை உரிக்க வைத்துவிட்டது. அந்த சிறுவன்தான் வளர்ந்து, திருமணம் முடித்து, மூன்று ஒப்பற்ற பிள்ளைகளை இவ்வுலகுக்கு வழங்கி சிறப்பித்து அமர்ந்திருக்கிறார்.

அம்மா பாட்டை நிறுத்தவில்லை. அப்பா படம் போடுகென் ! படம் போடுகேன்’னு சொல்லி எல்லா சொத்தையும் வாழி பாடிக்கிட்டு கெழக்கமாற போனாரு! மகன் அங்ஙற்றம்!

அம்மா சொன்னது உண்மைதான். தாத்தா ஒரு திரையங்கத்தை நடத்தி எம்.ஜி.யாரும், சிவாஜியும் வசூல்செய்து தந்த காசை மீண்டும் பானக்குப்பிக்கும், ஜெமினி கணேசனுக்கும், ஏ.வி.எம் ராஜனுக்கும் திருப்பித் தந்ததில் சொத்துகள் ஸ்வாகா’வானது.

அவர் திருவோடு ஏந்தி தெருவோடு போக அந்தத் திரையரங்கமே முக்கிய அங்கம் வகித்தது என்றால் அது பங்கமில்லை .

எல்லா உள்ளிகளும் உரிக்கப்பட்டு மதிய உணவு மண்சட்டியில் மேடையேறத் தயாராகயிருந்தன. அம்மா எழுந்து சமையலைறைக்குப் போனாள். நான் விடைபெறத் தயாரானபொழுது அம்மா சொன்னாள்,

“மத்தியானம் சாப்புட வருவன்னா நேரத்தயே சொல்லீரனும்! அதுக்கேத்த மாதிரி அரிசி போடுவேன்! நெத்திலி மீன் கறியும், ரசமும்! வருவியா ?”

நாவுகள் அபாரமானவையன்றோ ? நான் சடாரென சொன்னேன், ரெண்டு மணிக்கி டாம்ன்னு வந்துருவேன்! சோத்த போட்டு வையிம்மா !

அப்பா என்னைப் பார்த்தார், 'புட்டு திங்க வந்ததுக்கே விடையக் காணும்! இதுல மத்தியான சாப்பாட்டுக்கும் வருவேம்’னு சொல்லிட்டு போவுதே செவத்து சகுனிநாயி !' என்று அவர் எண்ணியிருக்கக் கூடும். நான் வந்து விட்டேன்.

ஏனெனில் நாவுகள் அபாரமானவை மட்டுமல்ல ! உக்கிரமானவையும் கூட...


-பிரபு உள்ளிராஜ்

     |   

Other Pages