வில்லிசை கலைஞர் பூங்கனி மறைவு


குமரி மாவட்ட வில்லிசை கலைஞர் பூங்கனி (86), கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரத்தில் நேற்று (01/11/2018) நள்ளிரவு காலமானார். சென்னை பல்கலைக்கழக இதழியல் துறை வழங்கிய, முத்துமாரி விருது பெற்ற கலைஞர். பல்லாயிரம் முறை வில்லிசை நிகழ்த்தியவர். அவரது கடைசி நிகழ்ச்சி, குமரி மாவட்டம் ஆலடிவிளை கிராமம், ஒற்றைவீரன் கோவில், ராஜாமணி நாராயணன் வளாகத்தில், 2015ம் ஆண்டு அக்டோபரில் நடந்தது.

மதுரைக்கு தெற்கே, அன்றைய ஒன்றுபட்ட மாவட்டங்களான இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் வில்லிசைக்கு 1975வரை மவுசு இருந்தது. குறிப்பாக விருதுநகர், சாத்தூர், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், கோவில்பட்டி, விளாத்திக்குளம், தூத்துக்குடி, சங்கரன்கோவில், தென்காசி, அம்பாசமுத்திரம், வள்ளியூர், நாங்குநேரி, நாகர்கோவில் வட்டாரங்களில் கோவில் திருவிழா சமயங்களில் வில்லிசை நிகழ்ச்சி இடம்பெறாமல் இருக்காது. வில்லிசை மன்னர் சாத்தூர் பிச்சைக்குட்டியால் இவர் பாராட்டுகளையும் பெற்றவர்.

அடியேன் அவருடைய வில்லிசை நிகழ்ச்சியை பார்த்துள்ளேன். அவருடைய குரல் கம்பீரமானது. அவருடைய வில்லிசை பொங்கி பிராவகமாக ஜொலித்தெடுக்கும். குமரி மாவட்ட நண்பரொருவர், “அவருடைய நிகழ்ச்சியில் அவர் குரலைக் கேட்க பறவைகள் காத்திருக்கும். கோவில் கொடை காலம் முழுவதும், பூங்கனி என்ற பெயரால் நிரம்பி இருக்கும். அவரது வில்லிசை பொங்கி பிரவாகம் எடுக்கும். அவர் குரல் கேட்க, பறவைகள் ஓய்வெடுத்து காத்திருக்கும்.

நிறைநாழியில் நெல் அளந்து, வில் வளைத்து, அவரது வில்லிசை குழுவினர் நாண்பூட்டும் அழகு பிரத்யேகமானது என்பர் வில்லிசை ரசிகர்கள். குடம்காரர், உடுக்கைக்காரர், பின்பாட்டுக்காரர்களை, வீச்சுகோல் வழியாக ஒருங்கிணைத்து சுவாரசியமாக நிகழ்துவார். இசைவழி நடனத்தை முன்னெடுப்பார். இடுப்புக்குமேல் உடலை மட்டும் அசைத்து, பாமரர்களுக்கு கொஞ்சம் ஆசுவாசம் தருவார். அவரது பின்னல் இளைஞர்களை பின்னி எடுக்கும்.

வில் வீச்சுகோல், அவர் கழுத்தை சுற்றி எப்போதாவது ஒருமுறை தான் தவழ்ந்து நகரும். அந்த வேளைக்காக கண்ணிமைக்காமல் காத்திருக்கும் ரசிகர் பட்டாளத்தை அறிவேன். பொதுவெளிகளில், அந்த அசைவின் அனுபவ வசந்தம், நேரம் காலம் இன்றி வர்ணிப்பு பெறும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருமுறை விடுதலை புலி இயக்கத் தலைவர் பிரபாகரனும் குமரி மாவட்ட பக்கம் சென்றபோது இவருடைய வில்லிசையை கேட்டு பாராட்டியதும் உண்டு. நாட்டுப்புற தெய்வங்களை கிராமப்புறத்தில் நம்பிக்கையின் காரணமாக ஆட்டிவைப்பதும், வீட்டு விலக்கான பெண்கள் கோவிலுக்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாட்டை தன்னுடைய நிகழ்ச்சிகளால் உடைத்தெறிந்தவர். மண்ணை கூட்டிவைத்து இதுவந்து ஆடு என்று பாடினால், நாட்டுப்புற சாமியும் வந்து ஆடும் என்பார்.

இவ்வளவு ஆளுமையான இந்த அம்மையார் இறுதி காலத்தில் 2 ஆடுகளின் துணையோடு ஒரு குடிசையில் தான் வாழ்ந்தார். வேதனையும், ரணங்களும் இறுதிக் காலத்தில் இவரை வாட்டினாலும் நம்பிக்கையோடு பேசுவார். கலா ரசிகர்களை கட்டிப்போட்ட அம்மையார் பூங்கனி மறைவு அனைவரையும் வருத்தப்படுவது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்துள்ளது. 12 வயதில் பாடத் துவங்கி தனக்கென்று ஒரு முத்திரையை பதித்தவர். அன்றைக்கெல்லாம் இவர் ஒரு நிகழ்ச்சிக்கு ரூ. 150/- வாங்குவார். ரசிகர்களின் கனவாக இருந்து அவருடைய வில் கோளின் வீச்சும், பாட்டின் அபாரமும், ஆட்டத்தின் பாவனைகளும் அற்புதமாக இன்றைக்கும் கண்முன் தெரியும். கிராமியக் கதைப் பாடல்களை அப்படியே வீரியத்தோடு அவருடைய வாயிலிருந்து புறப்படும்.

இப்படி தென்மாவட்டங்களில் வில்லிசைக் கலைஞர்கள் ஒரு காலத்தில் வலம் வந்ததுண்டு. நாட்டுப்புறவியலும், கலைகளும் இன்றைக்கு மருவி வருகிற நேரங்களில் அம்மையார் பூங்கனியுடைய வரலாற்றை எழுதி அவருடைய பணிகளையும், ஆய்வுகளையும் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும். அவருக்கு ஆழ்ந்த இரங்கல்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
02-11-2018



WhatsApp Posts Posted by WhatsApp Posts

Shared Content on WhatsApp

views: 2232