For Advertising... Please Contact - 9940542560

சிப்பி சுண்ணாம்பு - சேதுபதியூர் புத்தளம்

Puthalam  |      2  |   

விளிம்புநிலை சமூகத்தினரை சந்திக்க நான் இன்று சென்றுருந்தது புத்தளம் பஞ்சாயத்துக்குட்பட்ட 'சேது பதியூர்' என்கிற கிராமத்திற்கு. இது குமரி மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கிறது.


உச்சிமகாளி அம்மன் கோவிலை சுற்றி சுமார் நூற்றி ஐம்பது குடும்பங்களாக வசிக்கிறார்கள்.

குலத்தொழில் கடற்கரையில் சிப்பி (கிளிஞ்சல்கள்) பொறுக்குவது பின்னர் அதனை சுட்டு சுண்ணாம்பு செய்வது. தமிழக முழுவதும் உள்ள கடற்கரையினை ஒட்டிய மேல் பகுதிகளில் பரவலாக வசிக்கிறார்கள் இந்த இனக்குழுவினர்.

இவர்களும் எல்லா இனக்குழுக்களும் சொல்லிக்கொள்வதைப் போலவே ஆண்ட பரம்பரையாக தங்களையும் சொல்கிறார்கள். "நாங்கள் தொண்டைமான் வழித் தோன்றல்" என்கிறார்கள்.

சிலர் இந்து தொண்டைமான் எனவும் ஒருசிலர் இந்து பரவர் எனவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்து தொண்டைமான் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களாகவும் (MBC), இந்து பரவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும்(SC) அரசாங்கம் வகைப் படுத்துகிறது. பெருவாரியான இளையோர்கள் முதுநிலை கல்வி என அதனையும் தாண்டி கற்றுள்ளனர். ஆனால், வேலை வாய்ப்பின்றி காணப்படுகிறார்கள்.


உச்சிமகாளி அம்மன் குலவாழை இசக்கி, கடுவா மூர்த்தி, நாகக்கன்னி ஆகிய தெய்வங்களை தாங்களது குலதெய்வங்களாக வழிபடுகின்றனர்.
இவற்றில் குல தெய்வமான 'நாகக்கன்னி' திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இருக்கிறதாம்.

சேதுபதியூரில் ஆங்காங்கே சுண்ணாம்பு காளவாய்கள் உள்ளன. தினசரி ஒருவர் கடற்கரையில் சிப்பிகள் பொறுக்குவதன் மூலம் 15 ரூபாய் குறைந்த வருமானம் மட்டுமே ஈட்டமுடிகிறது. சிப்பி பொறுக்குவதற்கென்றே (வட்டில்) வட்டவடிவமான பனை நாரினால் கட்டப்பட்ட அரிப்பினை பயன்படுத்துகிறார்கள். தினசரி அவற்றை பொறுக்கி குவியலாக வீடுகளில் சேமிக்கிறார்கள்.

சுண்ணாம்பு காளவாய்களில் அடுப்புகரியுடன் கலந்து கொட்டி நெருப்பு வைக்கிறார்கள்.கனன்று எரிந்த பின்னர் சிப்பி வெண்மையாக
காணப்படுகிறது.(சங்கு சுட்டாலும் வெண்மையே).



சுட்ட சிப்பியினை தண்ணீரில் போட்டால் அப்படியே கரைந்துவிடுகிறது. இதனையே சுண்ணாம்பு நீர்த்துதல் என்கிறோம்.

சுடப்பட்ட சிப்பிகள், ஒரு பெட்டி (கடவம்) சுமார் 25 ரூபாய் வரை விற்கிறது.
சுடப்பட்ட சிப்பி நீர்த்து வீடுகள் வெள்ளையடிக்கவும் மற்றும் தாம்பூலம்த்திற்கான சுண்ணாம்பாக பயன்படுகிறது.
சுண்ணாம்பின் பயன்பாடு வழக்கொழிந்து வருவதால் இந்த சுண்ணாம்பு காளவாய்கள் வெறுமனே பற்றவைக்க படாமல் கிடக்கிறது.

"எனது பிள்ளைகள் படித்திருக்கிறார்கள், இந்த தொழிலில் என்னோடு முடிகிறது" என்கிறார் செல்லப்பன் (75). சிப்பி சுடும் போது எழும் புகையினால் தனக்கு நுரையீரலில் பாதிப்பு இருக்கிறது என்றார்.

ராசம்மா (65) தனது வீட்டிலும் களவாய் வைத்திருக்கிறார். வீட்டின் ஒரு பகுதியில் சின்னதாக காய்கறி கடையும் வைத்திருக்கிறார். அதுபோக ஓலை நார் பெட்டி (கடவம்) முடைகிறார். இரண்டு மூக்கிலும் பெரிய சொளவு மாதிரியான மூக்குத்தி அணிந்திருக்கிறார். தனது பத்தாவது வயதில் மூக்கு குத்தி அணிந்திருக்கிறார் ஒன்று 'அன்னம்' மூக்குத்தி இன்னொன்று 'சங்கு' மூக்குத்தியாம். மூக்குத்தியில் ராசம்மா நீங்கள் இன்றும் அழகாக இருக்கிறீர்கள் என்றேன், ராசம்மாவின் முகம் மூக்குத்தியைவிட ஜொலித்தது.


சின்ன சின்ன சிப்பிகளை கோர்த்து (டோர்கர்ட்டன்) மாலையாக செய்து கொண்டிருந்தார் சாந்தி (43), உயர்நிலை பள்ளி படிப்பு வரை படித்திருக்கிறார். இரண்டு குழந்தைகள்; இருவருமே படிக்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருப்பதால் தாங்களுக்கான வேலை வாய்ப்பு குறைவாகவே இருக்கிறதாக ஆதங்கப்பட்டார். இங்கே ஆண்களிடம் குடிப்பழக்கம் மிக குறைவாகவே உள்ளது என்றும் வரதட்சணையும் எங்களிடம் கிடையாது என்றார்.

இவர்கள் தாங்களை தாழ்த்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என ஒருமித்த கருத்தில் சொல்கிறார்கள். இவர்களுக்கான அரசியல் முன்னெடுப்புகளும் இல்லை. தாங்களில் ஒருவர்கூட வார்டு கவுன்சிலராககூட இல்லை என்று ஆதங்கப்டுகிறார்கள்.

1810களில் எட்கர் தர்ஸ்டன், "தென்னிந்தியச் சாதிகளும் குலங்களும்" என்னும் தலைப்பிட்ட ஆங்கிலப் பெருநூலை அரசிடம் ஒப்படைத்தார். அந்த ஆய்வறிக்கையில் ஒவ்வொரு சாதியினரும் குலத்தவரும் தம்மைத் தெய்வத்தோடு தொடர்பு கொண்டவர்களாகவும் ஆண்ட பரம்பரையாகவும் கூறியதை குறிப்பிட்டிருக்கிறார் என்பதை நாம் இப்போது நினைவில் கொள்ளவேண்டியுள்ளது.



Courtesy: Jawahar Clicks


   2  |   

Other Pages