For Advertising... Please Contact - 9940542560

தென்காசி பகுதியில் பிச்சை எடுக்கும்...

Tenkasi  |        |   

தென்காசி நகராட்சியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கொரொனா ஊரடங்கு காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் கடுமையான நெருக்கடியில் சிக்கி உள்ளது. வழக்கமாக குற்றால சீசன் காலத்தில் ஊசி, பாசி விற்கும் தொழிலை செய்து வந்தனர். கோவில் விழாக்களிலும் அவர்களுக்கு தேவையான வருமானம் கிடைத்து வந்தது.
மார்ச் மாதம் துவங்கிய நாடு தழுவிய பொது முடக்கம் அவர்களை முச்சந்தியில் நிறுத்தி விட்டது.

சுற்றுலா பகுதிகளில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளதால் கடுமையான வாழ்வாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. முதல் இரு மாதங்களில் கையில் இருந்த உணவுப் பொருட்களும் சமூக இயக்கங்கள் அளித்த நிவாரணப் பொருட்களும் அவர்களை ஓரளவுக்கு காப்பாற்றி வந்துள்ளன.

ஜூன் மாதம் தொடங்கி ஜுலை மாதம் உச்சமடையும் குற்றால சீசன் காலத்திற்குள்ளாகவே கொரோனா ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தென்காசி மாவட்டத்தில் எதிர்பாராமல் அதிகரித்த நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதனால் மிகவும் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர் நரிக்குறவர் இன மக்கள். வாடிப் போன முகமும் ஒட்டிப்போன வயிறுமாக அவர்கள் தற்போது தென்காசியின் தெருக்களில் பிச்சை எடுக்கத் தொடங்கியுள்ள்னர்.
நகரின் முக்கிய தெருக்களில் ஒவ்வொரு கடைகளிலும் ஏறி இறங்கிச் சென்று மக்களிடன் கையேந்தி வருகின்றனர். ஆண் மற்றும் பெண் குழந்தைகளும் வயதானவர்களுடனும் வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கும் அவலம் நிகழ்கிறது.
அவர்களில் ஒரு பெண் பேசும்போது, “ஒரு குடும்பமாக நாங்க பிச்சை எடுக்கப் போகிறோம். நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் கிடைக்கிறது. அரிசி எங்களிடம் இருக்கிறது. மற்ற செலவுகளுக்கு இந்த ரூபாயை பயன்படுத்தி வயிற்றைக் கழுவி வருகிறோம். குழந்தைகளுக்கு தேவையான பால், மளிகை சாமான்களுக்காக சிரமப்படுகிறோம். குழந்தைகளுக்கான உடைகள் இல்லை. ஒரு மாதம் முழுவதும் ஒரே உடைதான் வைத்துள்ளோம். வறுமையினால எங்க ஆட்கள் நாலு பேர் செத்துட்டாங்க. இப்படியே நிலைமை போனால் மொத்தமா சாகிறதத் தவிர வேற வழியில்லை” என்று சொல்கிறார்.

குழந்தைகள் நிலைமை அத விட மோசம். சில்லறைக் காசுகளுக்காக கையேந்துவதைப் பார்க்கவே சகிக்கவில்லை. ’ஒரே ஒரு ட்ரஸ் தாங்க’ன்னு கேட்கிறார்கள். அவர்களின் கல்வி அறுபட்டுவிட்டது.

உழைத்துச் சாப்பிடும் நாடோடி சமூகமான நரிக்குறவர்கள் பிச்சை எடுக்கத் தொடங்கி இருப்பது மோசமான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

Courtesy: Dayalan Shunmuga

     |