பெருங்கடல் வேட்டத்து - Perungadal Vettaththu


கடந்த 2017 ஆம் வருடத்தின் இறுதியில் கன்னியாகுமரி மற்றும் கேரளப் பகுதியைத் தாக்கிய ஓகி என்னும் புயல், குறிஞ்சி மற்றும் நெய்தல் நிலத்து மண்ணையும் , மக்களையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. மத்திய அரசும் , மாநில அரசும் மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கி விளையாடியதில் கொத்துக் கொத்தாக மீனவர்கள் மீன்களுக்கு இரையாகினர். மலைவாழ்மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும், கடற்கரையோர மீனவ மக்கள் தங்கள் வாழ்வின் ஆதாரங்களையும் இழந்தார்கள்.

வாழ்வாதாரங்களை எப்பாடுபட்டாவது மீட்டெடுத்து விட முடியும். வாழ்வின் ஆதாரங்களை எப்படி மீட்பது ?

அண்ணன் Arul Ezhilan அவர்கள் உருவாக்கிய 'பெருங்கடல் வேட்டத்து' என்ற தலைப்பிலான ஐம்பத்தி ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு ஆவணப்படத்தை நேற்று நாகர்கோவிலில் திரையிட்டார்கள். மிக அழுத்தமான மன நிலையோடுதான் பார்க்கத் துவங்கினேன்.
நாலைந்து நாட்கள் வரையிலும் இரைஞ்சும் கடலுக்குள் மூச்சைப் பிடித்துப் போராடி, மூத்திரத்தைக் குடித்து , காப்பாற்ற யாரும் வராத நிலையில், தாக்குப் பிடிக்க முடியாமல், நுரையீரலில் உப்புநீர் ஏறி, துடிதுடித்து செத்துப் போன மீனவர்களின் உடலை நான் நேரடியாகக் கண்டேனானதால் என்னால் அந்த ஆவணத்துக்குள் மனதளவில் ஒன்ற முடியவில்லை.

தன்னுடைய தாய் மண்ணுக்கும், மண்ணின் மக்களுக்கும் சாமான்யனான தன்னாலும் , தன்னுடைய அரசாங்கத்தாலும் செய்ய இயலாத ஒரு இயலாமையை, தனக்கு இயன்றவாறு ஒரு எளிய மனிதனாய் இந்த ஆவணத்தை முன்வைக்கிறார் Arul Ezhilan.

போராட்ட வடிவங்கள் கையெழுத்துப் பிரதியிலிருந்து, டிஜிட்டல் சினிமா வரைக்கும் வந்திருக்கிறது, போராடுவதற்கான காரணங்கள் மட்டும் குறையவில்லை இந்தியாவில் என்பது மிகப்பெரிய எரிச்சலடைய வைக்கும் உண்மை.

முதல் காட்சியில் உயரத்தில் இருந்து ஏரியல் ஷாட்டாக அந்த நீலக்கடல் விரியும் போது, அந்தக் கடல்தானா அத்தனை ஆர்ப்பாட்டம் செய்தது? என்கிற மாதிரி அமைதியாகவே இருக்கிறது அந்த ஆழக்கடல். அந்தக் காட்சியானது என் தேசத்தின் ஆட்சியாளர்கள் மீதான வெறுமையை எனக்குள் கடத்திய போது நானும் எனக்குள் இருந்த வெறுமையை உணர்ந்தேன்.

டைட்டில் முடிந்ததும் , ஒரு வீட்டுக்குள் இருந்து கேமரா அந்த வீட்டின் கதவை நோக்கிப் பயணித்து அந்த வீட்டின் முற்றத்தை அடையும், முற்றத்தில் கடல். என் வீட்டின் முற்றமே கடல்தானடா! என்னும் ஒரு மீனவனின் பெருமை என் முகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது.

அந்த அற்புதமான காட்சி வழி மொழியாடலில் ஒரு குறிப்பிட்ட இனத்தின் பிள்ளைகளின் மிகப்பெரிய வாழ்வியல் உண்மையை நமக்குச் சொல்கிறார் இயக்குனர். கடலில் இருந்து சக மீனவர்களின் உதவியோடு மீட்கப்பட்ட வெகு சொற்பம் மீனவ சகோதரர்களின் பேட்டி இடம்பெற்றது.

இந்திய இராணுவ அமைச்சரின் காணொளி இடம்பெற்றது, தமிழக முதல்வரின் ( பொறுப்பு ) காணொளி இடம் பெற்றது. ஒரு நடுத்தர வயது அம்மா, தன் இளவயது மகன் மாயமானது குறித்து கதறிய போது எழுந்து வெளியே வந்து விட்டேன். நமக்கு அவ்வளவுதான் முடியும்... அதற்குமேல் தாங்க முடியாது.

இயக்குனர் வெளியே நின்றிருந்தார். நான் கூட நினைத்துக் கொண்டேன், எடிட்டிங் , ப்ரிவியு , ஒலி சேர்ப்பு என்று எத்தனை முறை பார்த்திருப்பார் ? தான் பெற்ற பிள்ளையே ஆனாலும் ஒரு அளவுக்கு மீறி முத்தமிட்டால் வாய் வலிக்காதா ? ஆச்சர்யம் என்னவென்றால், நான் எழுந்து வெளியே வந்த போதுதான் அவரும் வெளியே வந்திருக்கிறார். அட ! அவருக்கும் கூட நம்மைப் போலவே திட மனதுதான் போலிருக்கே ? என்று கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

அந்தப் படத்தை நான்தான் ஒளிப்பதிவு செய்திருக்க வேண்டும். அந்த சமயத்தில் நாங்கள், எங்கள் உடல், பொருள், ஆவி அத்தனையையும் குறிஞ்சி நிலத்து மக்களுக்கு ஒப்படைத்திருந்ததால் என்னால் முடியவில்லை. என் அண்ணன் Jawahar அந்தப் பணியைத் திறம்பட செய்திருக்கிறார். இந்தத் துறையின் மூப்பராயிற்றே? கேட்கவா வேண்டும் ?
இயல்பான ஒளி, தரமான கோணங்கள் என்று அவரது வித்தியாசமான பார்வையிலான ஒளிப்பதிவு நம்மையறியாமல் அந்தப் படத்துக்குள் உட்கார வைத்து விடும்.

ஆதங்கப் பட்டோ, ஆவணப் படுத்தியோ ,அழுதோ கூட அதிகார வர்க்கத்தை அல்லது ஆளும் வர்க்கத்தை எளியவனின் பக்கம் திருப்பி விட முடியாது என்னும் உண்மை ஆளும் கட்சியின் அடிமட்டத் தொண்டனுக்கும் புரியும். அதனால்தான் அவனுக்குப் புறமுதுகு இடும் சூழலைக் கூட இந்த அதிகார வர்க்கம் கொடுக்காது. திரும்பினால் சுடப்படுவாய் ! அவ்வளவுதான் ...

தன் சக மனிதனின் கண்ணீரை விடவும் ஒரு Extra Element தேவையில்லை என்றோ என்னவோ இயக்குனர் மனதைப் பிழியும் பின்னணி இசையை நம்பவில்லை. Atmospheric Sounds அதாவது சுற்றுப்புற ஒலியோடே படம் முழுவதும் நகர்கிறது. சில இடங்களில் வரும் தேவாலயப் பாடல்களில் நம்மை அழ வைத்திருக்கிறார்.

நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர். லெட்சுமி மணிவண்ணன் , பேரிடர் காலத்து மத வேறுபாடுகள் குறித்துப்பேசி, அந்த மேடையை ஆச்சரியப்படுத்தி விட்டு, இன்னொரு தகவலை முன்வைத்தார்.

'தானே' புயல் சமயத்தில் பாதிக்கப் பட்ட இந்து மீனவர்கள் இன்னும் முகாம்களிலிருந்து வீடு செல்லவில்லை. வீடு இருந்தால்தானே செல்வதற்கு ? என்று சொல்லி அதிர வைத்தார்.

தமிழ்ப்பற்று , தமிழ் எங்கள் மூச்சு , சிங்கள ராணுவம் ஒழிக ! , ராஜ பக்ஷே நாய் ஒழிக ! , எங்கள் ஈழத்துச் சகோதரர்கள் அங்கே செத்தார்கள்..... என்று முழங்கிக் கொண்டு , சொந்த ஊரான நாகர்கோவிலில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் குறித்து அறியாத மண்டையன் நான்! எனக்கு கடலூரில் உள்ள முகாம் எப்படித் தெரியும்?

ஆனாலும் ஆச்சரியம் என்னவென்றால், கிறிஸ்தவ, இசுலாமிய மார்க்கங்கள் எங்கள் பிள்ளைகளை மூளைச் சலவை செய்கின்றன! எனக் கூச்சலிடும் இந்தத் தேசத்தின் சொந்தப் பிள்ளைகள், ஏன் இந்து மீனவனைக் கைவிட்டார்கள்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா ? அவர்கள் இந்துக்கள் இல்லையா ? என்று புரியவில்லை.... அதையும் லக்ஷ்மி மணிவண்ணனே சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மேலும் அவர், கிறிஸ்தவப் பாதிரியார்கள் தங்கள் சமூகத்து மக்களின் அரசியல் முடிவுகள் மீதான கரங்களை அகற்றிக் கொள்ள வேண்டும்! என்றொரு கருத்தை முன்வைத்தார். அதுவும் ஏனென்று புரியவில்லை. மீனவர்கள் என்னும் பட்சத்தில்தான் இந்த அரசு கிறிஸ்தவ மீனவனுக்கும் , இந்து மீனவனுக்கும் பாரபட்சம் காட்டுகிறதா ? அல்லது சாதியப் படிநிலைக் கட்டமைப்பின் மீதான காழ்ப்புணர்ச்சியா ? என்பதையும் அவர் தெளிவு படுத்தவில்லை. ஆனாலும் அவரது கருத்துக்கள் வலுவானதாகவே இருந்தது.

அப்படியே இன்று இருக்கும் சூழலில், ஒரு மாற்று மதத்து சகோதரன் , அவன் மீனவன் ஆனாலும் கூட, பொதுவெளியில் அவனுக்கு ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் ஆதரவுக் கரம் நீட்டினால் அவர் மதமாற்றம் செய்வதாகவே கருதப்படும் என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ளவேண்டும்.

நான் மீண்டும் உள்ளே சென்று அமர்ந்தபோது, ஒரு இளம்பெண் தன்னுடைய இரண்டு மாதக் கைக்குழந்தையை வைத்தபடி சிரித்தவாறே பேசிக் கொண்டிருந்தார். காப்பாற்றப் பட்ட ஏதோவொரு மீனவச் சகோதரனின் மனைவி போலும் என்று எண்ணிக்கொண்டிருந்த போதே அந்தப் பெண் சொன்னாள்.

என்னுடைய இந்த இரண்டு குழந்தைகளையும் நான் எந்தக் குறைவுமில்லாமல் காப்பாற்றுவேன். கடவுள் என்னையும் , என் பிள்ளைகளையும் காப்பாற்றுவார்! என்று ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கையோடு அவள் முடித்த போதுதான் அவளின் அந்தப் புன்னகைக்குப் பின்னால் ஒளிந்து நின்று கொண்டிருந்த வலி புலப்பட்டது. அவளது கணவன் ஒகிப்புயல் சமயத்தில் மீன் பிடிக்கச் செல்லும் போது அந்த இரண்டாவது குழந்தை அவள் வயிற்றில் இருந்திருக்கிறது. அது பிறக்கும்போது அதன் தந்தை மரித்துப் போயிருந்தார். அந்தத் தகப்பன் தன்னுடைய பிள்ளையைக் காணாமலேயே கடவுளின் மடியில் பிரவேசித்திருந்தார்.

எனக்குத் தாங்க முடியாத துக்கம் ஏற்பட்டது.

சத்யராஜ், சுஹாசினியின் பிள்ளை நீருக்குள் மூழ்கி சாவதைக் காணச் சகிக்காமல் 'என் பொம்முக் குட்டி அம்மாவுக்கு' படத்தை இதுவரையிலும் பார்க்காத நான் ஒரு மிகப்பெரும் தைரியசாலி என்பது எனக்கு முன்னமே தெரியும். அந்தக் குழந்தையின் பிஞ்சு
கால் விரல்களோடு படம் முடியும் போது,நான் மட்டும் முன்னெச்சரிக்கையாக முதலிலேயே கண்களைத் துடைத்து விட்டு, அரங்கில் இருந்த அனைவரையும் பார்த்தேன். அவர்கள் அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீர்.

ஆச்சர்யம் என்னவென்றால் அங்கு வந்திருந்த உளவுத் துறை சகோதரனின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்திருந்தது.

பாவம் ! அவரும் மனிதர்தானே ?
Prabhu Dharmaraj Posted by Prabhu Dharmaraj

Photographer & Writer

views: 2349
   

Leave a Comment

Note: HTML is not translated!