சுசீந்திரம் கோயில் குறித்த ஆவணப்பூர்வ வரலாறு


சுசீந்திரம் கோபுரமும் கூர்ம அவதாரமும்
சுசீந்திரம் கோயில் குறித்த ஆவணப்பூர்வ வரலாறு

முற்காலபாண்டியன் இரண்டாம் வரகுணன் (கிபி 862-880) என அறியப்படுகிற மாறன் சடையன் காலம் தொட்டு காணக்கிடைக்கிறது. சுசீந்திரம் கோயில் ஆனைப்பாறையில் உள்ள அவனின் 2-3ஆம் ஆட்சிக்கால கல்வெட்டு(1968/224) இக்கோயிலில் உள்ள காலத்தால் முந்திய கல்வெட்டு. இவனுக்கு வீரநாராயணன் என்றப்பெயரும் உண்டு. வீராநாராயணச்சேரி (வீராணி) (ஆளூர் அருகில்), வீரநாராயணமங்கலம் (தாழக்குடி அருகில்) என இவன் பெயரில் ஊர்கள் குமரிமாவட்டத்தில் உள்ளன. குமரிமாவட்டத்தின் சுசீந்திரம் உள்பட பல ஊர்களை பிரம்தேயங்களாக வழங்கிய பெருமை(?) இவனைச்சாரும். இக்கல்வெட்டும் பிராமணர்களுக்கு உண்பதற்காக (திருவக்கிரம்) விட்டுக்கொடுக்கப்பட்ட நிலம் மற்றும் அமரபுஜங்கப் பெருமாளுக்கு திருவாபரணமும், திருமுடியும் செய்யக் கொடுக்கப்பட்ட தானமும் பற்றி பேசுகிறது. அதில் நில எல்லையைக் குறிக்கும் போது தேவதான நிலமான நிருபசேகரநல்லூர் என குறிப்பிடுகிறது. அது இன்று கக்காடு என அழைக்கப்படுகிறது. இக்கல்வெட்டு சுசீந்திரக்கோயிலை திருச்சிவிந்திரத்து ஸ்ரீ கோயில் என அழைக்கிறது. இன்றைய காலங்களில் சுசீந்திரக்கோயில் கல்வெட்டுகள் கோயில் பராமரிப்பு என்னும் பெயரில் சிதைக்கப்படுகின்றன. கோயிலின் வரலாறும் அழிக்கப்படுகின்றன. அந்த கல்வெட்டு காலம் தொடங்கி திருவாங்கூர் அரசர் மூலம்திருநாள் கோபுரக்கட்டுமானம் கட்டி முடித்த கிபி1888 வரை சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இக்கோயில் பலநிலைகளில் வளர்ச்சியடைந்துள்ளது. திராவிட கட்டிட மரபின் பாண்டிய, சோழ, நாயக்கர் பாணிகளை இக்கோயிலில் காணமுடியும். நாஞ்சில் நாடு ஒவ்வொரு ஆட்சியாளன் கையிலும் அவதியுற்றதற்கு இக்கோயில் ஒரு நல்ல அடையாளம். கிழக்கு நோக்கி அமைந்த இக்கோயிலின் நுழைவாயிலில் இருபுறமும் யாளிகளின் சிற்பங்கள் அழகு. அடுத்து நாடகசாலை. இதுவே மிக அண்மைக்காலம் வரை கோயில் சார்ந்த கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தும் இடம். தேவதாசி முறை இருந்தவரை(கிபி1930) இதில் அவர்கள் நடனமாடியுள்ளனர். நாடகசாலையை இக்கோயிலில் பணியிருந்த எட்டு தேவதாசியினர் கட்டினர் அம்மண்டபத்தில் உள்ள எட்டுப்பாவைகளும் அவர்கள் என்பது பரம்பரைத் தகவல். 17ஆம் நூற்றாண்டு நாடகசாலை மண்டப கல்வெட்டு(1968/230) ஒன்று” சிவிந்திர முடைய நயினார் கோயிலில் தெய்வ கன்னிகளில் சிறப்புக்குடி நாலாங்குடி நல்ல உமை மகள் பாப்ப குட்டி சதா சேவை” என்கிறது. நாடகசாலைக்கு அடுத்து வருவது கோயில் ராஜகோபுரம். இந்த நாடகசாலை, ஊஞ்சல் மண்டபம், மாக்காளை மண்டபம், சுற்றுப்பிரகாரம், ஆதித்ய மண்டபம் எதுவும் 16ஆம் நூற்றாண்டின் பிற்பாதி காலத்திற்கு முன்பு இக்கோயிலில் கிடையாது. கோட்டைமதில் போன்ற சுற்றுசுவரும் கிடையாது.

குமரி மாவட்ட கோயிகளில் இருகோயில்களுக்கு ராஜகோபுரங்கள் உள்ளன. அவை பத்மநாபபுர நீலகண்ட கோயில், சுசீந்திர தாணுமாலய கோயில். தரைமட்டத்திலிருந்து 40.35 மீட்டர் உயரம் கொண்டது இக்கோபுரம். கோபுர அதிஷ்டானம் முழுவதும் கருங்கல்லானது. 25% சாய்மானத்தை அதிஷ்டானம் முதல் உச்சிவரை கொண்டுள்ளது. சோழர்கால பாணியைப் பின்பற்றி கோபுரத்தில் புராணக்கதை மற்றும் தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. மாடக்கூடு விஜயநகரபாணி. ஏழு நிலைகளும், ஏழு செப்பு ஸ்தூபிகளும் கொண்டது. தமிழும் சமஸ்கிரதமும் கலந்த கோபுரவாயில் வடக்கு சுவரிலுள்ள கிபி1544 வருட கல்வெட்டு(1968/240) விட்டலரும், அவன் தம்பி இணைந்து மலையாள ஆண்டு 720 ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி அன்று கோபுர அதிஷ்டானத்தை அமைத்தாக கூறுகிறது. கிருஷ்ணதேவராயர் வேணாடு மீது படை எடுக்க எண்ணுகிறார் அவரின் வாரிசு அச்சுத தேவராயர் தன் மைத்துனன சாளுவ திம்மனை படை எடுத்துச்செல்ல பணிக்கிறான். இப்படை தென்பாண்டியர்களுக்கு உதவ வந்தது. நிகழ்ந்தது கிபி 1532. வேணாட்டரசன் பூதலவீர உதய மார்த்தாண்ட வர்மன் ஒப்பந்தம் செய்து மரபுவழி இடங்களை பாண்டியர்களுக்கு ஒப்படைக்க சம்மதிக்கிறான். இது முதல் முறை. அடுத்து இரண்டாம் முறை விட்டலர் என்ற ராமராய விட்டலர் இவன் சின்ன திம்மனின் தம்பி, மதுரை ஆளுனர். தூத்துக்குடி முத்துக்குளித்தல் தொடர்பாக படை எடுக்க நேருகிறது. ஆரல்வாய்மொழி கணவாய் தாண்டி வரும் ராமராய விட்டலரையும் சின்னதிம்மனையும் தூய சவேரியார் வேணாட்டுக்காக பரிந்து பேச, ஒப்பந்தம் வழி யானைகளும், குதிரைகளும் கொடுத்து வைணவ வழிப்பாட்டுள்ள அவனை பத்மசுவாமி அழைத்துச்சென்று பெருமை செய்தான் வேணாட்டு அரசன் உண்ணி கேரள வர்மன். இக்காலத்தில் அந்த அதிஷ்டானம் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதன் பின்னர் 337 ஆண்டுகள் புதர் மண்டி கிடந்திருக்கும். 1873ல் பெய்த பெரும் மழையில் இதன் மேற்பகுதி சேதம் பட்டது. 1881 ஆண்டு மாசி மாதம் 25 தேதி விசாகம் திருநாள் கோபுர பணியை துவங்கினார். 4 ஆண்டுகளில் அவர் இறந்துவிட, மருமகன் மூலம் திருநாள் 1888 ஆனிமாதம் 21 தேதி தனது 30 வயதில் கட்டிமுடித்தார். அவரது 45 வயதில் பேச்சிபாறை அணையையும் கட்டி முடித்தார். கோபுரத்து ஓவியங்கள் அதன் பின்னரே வரைப்பட்டவை. காலத்தால் பழமையான குமரி மாவட்ட ஓவியம் திருநந்திக்கரை ஓவியம்.

கோபுரம் புராண தெய்வ கதைகளை சிற்பமாக கொண்டுள்ளது. அதில் ஒன்று கூர்ம அவதாரக்கதை. கோபுரத்தின் வடக்கு பகுதியில் இச்சிற்பம் மிக அழகாக உள்ளது. இப்புராணத்தின் கதை துவக்கம் மகாபாரத்ததில் உள்ளது அதில் கூர்மம் விஷ்ணு அவதாரமாக இல்லை மோகினியாக தான் விஷ்ணு வருகிறார். மந்தாரமலையாகி மத்து நிற்பதற்கு ஆமைகளின் அரசன் மாபெரும் ஆமையை கேட்க அது ஒப்புக்கொண்டது அது என்று மகாபாரதம் கூறுகிறது. மனித உருவில் இடுப்புகீழே ஆமையாகவும், வெறும் ஆமை உருவாகவும் காட்டுவது உண்டு. இங்கு முழு ஆமையாக காட்டப்பட்டுள்ளது. பின்னர் வந்த புராணங்கள் ஆமையை விஷ்ணு அவதாரமாக்கி விட்டன. விஷ்ணுவின் அவதாரம் ஆறு, பதினெட்டு பின்னர் பத்து என ஆக்கப்பட்டன. சமண மதத்தில் மீட்கும் தேவன் ஓவ்வொரு யுகத்திலும் ஒன்பது எண்ணமாக இருக்கும். இதுவே பத்து அவதாரக்கதைக்ளுக்கும் அடிப்படையாக இருக்கலாம் காரணம் இதுவரை ஒன்பது அவதாரங்களே விஷ்ணுவால் எடுக்கப்படாதாக குறிக்கப்படுகிறது. கல்கி எதிர்காலத்திற்கு என ஒதுக்கப்பட்ட அவதாரம்.

By Anantha Subramonian

Anantha Subramonian Posted by Anantha Subramonian

Anantha Subramonian

views: 7695
   1

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs