அழகியபாண்டிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் கன்னியாகுமரி வரை நீடிக்கப்படும்..


அரசு திட்டங்கள் மக்கள் நலனுக்காகவே அமைய வேண்டும்....
அழகியபாண்டிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் கன்னியாகுமரி வரை நீடிக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு அதிகாரிகள் சூழ்சியா... இது மக்கள் நலம் சார்ந்ததா?

பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுப்பது அரசின் கடமை. ஆனால் ஒரு பகுதி மக்களின் குடிநீரை பறித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்வது அரசின் நோக்கமாகலாமா?

மிகக் குறைந்த தண்ணீர் வரத்துடைய கோதையார் திற்பரப்பு பகுதிதியில் மன்னர்கள் ஆட்சிகாலத்தில் தடுப்பணை கட்டினர். நிலத்தடி நீர் குறைவான திற்பரப்பு, களியல், கடையாலுமூடு சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யவும், திருவட்டார் தச்சூர், மஞ்சாலுமூடு வரையிலான பகுதிகளில் விவசாய தேவை களுக்கும் இத்திட்டம் பயன்பட்டு வருகிறது.
திற்பரப்பு அணையினால் தேங்கும் தண்ணீரில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் வில்லுக்குறி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுத்து வருகிறது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்த பின் கோடைகாலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும், குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பகுதியான திற்பரப்பு அருவியில் வருடத்தில் அதிக நாட்கள் தண்ணீர் இல்லாத நிலையும் ஏற்படுகிறது.

இந்நிலையில் தான் இதே பகுதியிலிருந்து அழகியபாண்டிபுரம் குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்க அதிகாரிகள் முடிவு செய்து, ரகசியமாக பணிகள் துவங்க முயற்சித்தனர்.

பாதிப்புகளை எடுத்து கூறி அரசியல் கட்சி பாகுபாடின்றி மக்கள், அரசியல் தலைவர்கள் அதிகாரிகளுடன் பேசினர். மிகப்பெரிய திட்டத்திற்கு கோதையாற்றிலோ, பரளியாற்றிலோ, பழையாற்றிலோ தடுப்பணை கட்டி தண்ணீர் எடுங்கள் என கெஞ்சி கேட்டனர்
பல கோடி மதிப்பிலான திட்டம் முடிவு செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய முடியாது என , தங்கள் தவறுகளை மறைத்து, குடிநீர் திட்டத்தை மக்கள் எதிர்க்கின்றனர் என்ற தவறான தகவலை பரப்பினர்.

வேறு வழியின்றி மக்கள் நீதிமன்றத்தை நாடியது. களியல் முன்னாள் கவுன்சிலர் மனோகரன், பத்மனாபபுரம் எம்.எல்.எ மனோதங்கராஜ் இவர்களின் முயற்சியால் நீதிமன்றம் உண்மை நிலையை புரிந்துக் கொண்டது. இந்நாள் வரை எந்த இறுதி முடிவும் ஏற்படவில்லை..... 

இந்நிலையில் தான் திட்டத்தில் அதிக இடங்களை இணைப்பதாக முதலவர் அறிவித்திருக்கிறார். மனோ தங்கராஜ் எம்.எல்.எ நீதிமன்றத்தில் முன்வைத்த சில வாதங்கள் அதிகாரிகளின் முடிவு தவறு என்பதை உறுதி செய்கிறது. ஆனால் திட்டம் அவர்கள் விருப்ப படியே செயல்படுத்த வேண்டுமென அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். வாய்ப்புகள் பல இருந்தும் தங்கள் லாப நோக்கோடு எடுக்கப்பட்ட முடிவை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் எடுக்கும் சூழ்சியின் விளைவே முதலர் அறிவிப்பு மூலம் வெளிவந்துள்ளதாக கடையாலுமூடு முன்னாள் பஞ். தலைவர் சேகர் கூறுகிறார்..

உண்மை நிலையை புரிந்து சரியான முடிவு எடுக்க அரசின் பிரதிநிதிகள் முன்வர வேண்டும்.. இதுவே பாதிக்கப்படும் மக்களின் குரலாக உள்ளது.

Jaya Mohan Thirpparappu Posted by Jaya Mohan Thirpparappu

Writer & Reporter

views: 1140
   

News Discussion

Leave a Comment

Note: HTML is not translated!