For Advertising... Please Contact - 9940542560

குமரி மாவட்டத்தில் கடந்தகால திருமண வைபவங்கள்…

     |   

குமரி மாவட்டத்தில் முன்பெல்லாம் திருமணங்கள் இப்போது நடப்பதுபோல் திருமண மண்டபங்களில் நடப்பதில்லை. ஏனென்றால் அப்போது திருமண மண்டப கலாச்சாரம் ஆரம்பிக்கவில்லை. (I think P.D. Pillai Kalyanamandapam was the first one in Nagercoil) அலங்காரம் செய்யப்பட்ட ஓலைப்பந்தல் களிலேயே நடப்பதுண்டு. தெரு வீடுகளில் வசிப்பவர்களும் தங்கள் வீட்டின்முன்னால் பந்தல் அமைத்து நடத்துவர். இத்தருணத்தில் பக்கத்துவீட்டுக்காரர்களும் தாமாகவே முன்வந்து, தங்கள் வீட்டையும் சேர்த்து முன்னால் பந்தல்இட அனுமதிப்பார்கள்.

எங்கள் குடும்பத்தில் யாரும் மண்டபத்தில் திருமணம் நடத்தவில்லை.

ஒரு வாரத்துக்கு முன்பே பந்தல் காண்ட்ராக்டர் வந்து வெறும் ஓலைப்பந்தல் இட்டு செல்வார். திருமணத்துக்கு இரண்டுநாள் முன்னால் வந்து வெள்ளைத்துணிகளால் அலங்காரம் செய்துவிட்டுப்போவார். பந்தலினுள் ஆற்றுமணலை தரையில் பரப்பிவிடுவார். திருமணம் நடப்பதற்கு ஒரு நாள் முன்பு, குலைவாழைகளை வாசலில் கட்டிவிடுவார்கள். திருமணத்தன்று காலையில் ஒலிபெருக்கியில் திரைப்படப்பாடல்கள், திரைப்பட வசனங்களை இசைத்தட்டுகள் மூலம் இசைப்பார்கள். அந்த தெருவில் எல்லோரும் அதை இரசிப்பார்கள்.

Picture Courtesy: Rajesh Kumar

திருமணத்துக்கு சிலநாட்களுக்கு முன்பே உறவினர்கள் வரத்தொடங்கி விடுவார்கள். சிறுவர்கள் பந்தலினுள் ஓடிவிளையாடுவது ஒரு கண்கொள்ளாக்காட்சி. திருமணத்துக்கு முந்தையநாள் இரவுமுழுவதும் நண்பர்களும், உறவினர்களும் காய்கறி நறுக்க ஆரம்பித்து விடுவார்கள். அப்போது குளிர்காலமானால் அவர்களுக்கு சுக்குக்காப்பி வழங்கப்படும். சிலநேரம் அடுத்தவீட்டுக்காரரே தன் வீட்டிலிருந்து சுக்குக்காப்பி கொண்டுவந்து அவர்களுக்கு கொடுப்பார். ஆக, இப்படிப்படிப்பட்ட வைபவங்களை ஒட்டுமொத்த தெருவே கொண்டாடும்.

இப்படிப்பட்ட விழாக்கள் மக்களின் ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் தன்மை, உதவிசெய்யும் பண்பு ஆகிய சீரிய குணங்களை வளர்த்தன என்று கூறினால் அது மிகையாகாது.

இன்றைய இளைஞர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. இருந்தாலும், நம்மூரில் முந்தையை தலைமுறையில் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்று நம்புகிறேன்.

இன்றுகல்யாண மண்டபங்களில் திருமணங்கள் நடக்கின்றன. இரண்டே மணிக்கூறுகளில் எல்லாம் முடிந்துவிடும். எல்லோரும் அவசர அவசரமாக வந்து கடமைக்கு வைபவங்களில் கலந்து விட்டு போய் விடுகிறார்கள். இரண்டுமணிக்குள் மண்டபத்தை புக்செய்த அடுத்த பார்ட்டிக்காரர்கள் வரத்தொடங்கி விடுவார்கள். இது இன்றைய, காலத்தின் கட்டாயம். இ டநெருக்கடி, காலநெருக்கடி காரணமாக முன்புபோல் விமரிசையாக ஆற,அமர விழாக்களை நடத்த முடியாது.

எனவே நம் கடந்தகாலம் அதிக வசதியில்லாமலிருந்தாலும் அவ்வளவு மோசமில்லை என்பது என் கருத்து.

Courtesy: Jamaludheen Masthankhan

     |