For Advertising... Please Contact - 9940542560

பிழைத்தலே பெரியது..!! - Jawahar Clicks

Nagercoil  |        |   

பிழைத்தலே பெரியது..!!


நாகர்கோவிலில் எங்கு பார்த்தாலும் குண்டும் குழிகள், 
பொதுமக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக, நகரையே நடு வகிடெடுத்து இரண்டாக கிழித்து போட்டுருக்கிறார்கள்.

இந்த வேலையை செய்யும் தொழிளாளர்கள் யார் இவர்கள் ?

குழி தோண்டும் அந்த கூலித் தொழிலாளர்களை தேடி பயணப்பட்டேன்.

நான் இப்போது அவர்களது தற்காலிக (டென்ட்) குடியிருப்பிலிருந்து...

'ஏன்றி யாவு பேக்கூ' என்றவாறு குடிலில்ருந்து வெளியே எதிர்பட்டார் அனுமந்தப்பா(60) என்கிற பெரியவர். சற்று நேரத்தில் அந்த தற்காலிய குடியிருப்புகளில் இருந்த அத்தனை பேறும் என்னை சூழ்ந்திருந்தார்கள்.

எனக்கு தென்னிந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை கொஞ்சமாக பேசவும் புரிந்து கொள்ளவும் முடியும். மற்றபடி
புன்னகை மட்டுமே எங்கள் அனைவருக்கும் பரஸ்பர புரிதலுக்கான பொது மொழியாக இருந்தது. கைகளை ஆட்டி தெலுங்கு கன்னடத்தில் என பேச தெடங்கினேன். மிக சுவாரஸ்யமாக இருந்தது எங்களது உரையாடல்.

ஆந்திராவின் கர்நாடக எல்லையிலிருந்து இவர்கள் இந்த வேலைக்காக வந்துள்ளனர்.

ஊர்: பிளிச்சோடு, அனந்தபுரம் மாவட்டம் ஆந்திரா.
இனம்: 'போவி' என்கிற பட்டியல் இனத்தவர்.

மொழி: தெலுங்கு
குல தெய்வம்: "தாமம்மா" என்கிற அம்மன் சாமி.

ஆந்திரா கர்நாடக எல்லையிலிருக்கிறது 'பிளிச்சோடு' என்கிற அவர்களது கிராமம். விவசாயத்திற்கு வானம் பார்த்த பூமி, மழையை மட்டுமே எதிர்பார்த்து காத்துக்கிடக்கிற ஜனங்கள். தெலுங்கும் கனடமும் இவர்கள் சரளமாக பேசுகிறார்கள். மழை பொய்த்து போனதால் பிழைப்பை தேடி புலம் பெயர்ந்து வந்தவர்கள் தமிழ் நாட்டை நோக்கி.

இருபத்தைந்து பேர்கள் இந்த வேலைக்காக குழுவாக வந்திருக்கிறார்கள்; இவர்களுள் ஆறு பெண்கள்‌ மற்றும் இரு சிறுவர்கள் அடங்குவர். தார்பாலினால் அமைக்கப்பட்ட கொட்டகை, அன்றாடம் தொழிலுக்கு தேவையான தளவாட சாதனங்கள் மண்வெட்டி, பிக்காஸ் என இறைந்து கிடக்கிறது அவர்களது தற்காலிய குடியிருப்பு பகுதியினை சுற்றி.

சமையல் என்பது ஓட்டு மொத்த நபர்களுக்கும் ஒரு அடுப்புதான். அரிசி சாதம் வடித்து, அதற்கு சாம்பார் சேர்த்துக்கொள்வதாக சொன்னார்கள். இரவு உணவு ராகி கஞ்சி ( ராகி முத்தே). தினசரி எட்டு மணிநேரம் கடினமான உடலுழைப்பு என்பதால் இறச்சியும் மீனும் உண்பதுண்டு.
சுட்டெரிக்கும் வெயில் புழதியென மண்ணோடு தொழில் செய்கிறார்கள் மிகவும் வெள்ளாந்தியான ஜனங்கள்.
அவர்களது ஊரைக் காட்டிலும் நாகர்கோவில் வெயில் குறைவாக உள்ளதாக சொன்னார்கள்.

ஒரு பெரிய லோட்டாவில் ராகி கஞ்சியை கலக்கி தந்தார்கள் பொறித்த மோர் மிளகாவை கடித்துக்கொண்டே உள்ளிறங்கியது ராகி... நான் ரசித்து ராகியை குடிப்பதைக் கண்டு அவர்கள் முகம் மலந்தார்கள்.

இங்குள்ள ஆண்களுக்கு குடிப் பழக்கம் இல்லை என்றார் அனுமந்தப்பா. தினசரிக் கூலி 500 ரூபாய், இன்னும் மூன்று மாதங்கள் தங்கியிருந்து தண்ணீர் பைப் பதிக்க குழிகள் தோண்டும் வேலைக்கான கான்ராக்ட் உள்ளது என்றார்.

"இரு சிறுவர்களும் படிக்க பள்ளிக்கு போக வேண்டாமா?" என்றேன் அதற்கான பதில் அவர்களிடம் இல்லாதிருந்தது. நாங்கள் அன்றாடம் இப்படியாக வேலை என்று ஊர்களை சுற்றி பிழைக்கிறோம் இவர்களை எப்படி படிக்க வைக்க இயலும் என்று உதட்டை பிதுக்குகிறார்கள்.

அருகில் நின்ற சிறுவன் ஆகாஷ்யை பார்த்து அனுமந்தப்பா, "இன்னும் ஒரு சில வருடங்களில் இவன் பிக்காசையோ மண் வெட்டியையோ கைகளில் தூக்கி வேலை செய்துவிட ஆரம்பித்து விடுவான்" என்றபோது; ஆகாஷ் ஓடி சென்று தனது தாயை மார்போடு கட்டியணைத்து கண்களில் நீர் திரள முகம் வாடிநின்றான்.

"கல்வி வாய்க்கப்படமல் பிழைத்தலே பெரியதாகி போனது அவர்களது வாழ்க்கை".
ஆகாஷின் முகம் அதையே எனக்கு உணர்த்தியது.
அவர்களிடமிருந்து நான் விடைபெற கைகளை கொடுத்தேன்; இப்போது அவர்கைகளில் ஒட்டியிருந்த செவ்வளை மண்ணின் நிறம் எனது கையில் ஒட்டி சிவப்பாக மாற்றியிருந்தது.

வறுமையின் நிறம் 'சிகப்பே'...


Courtesy: Jawahar Clicks


     |