நாகராஜர் கோவில் முழுவிபரம்


மூலவர் : நாகராஜர்

தல விருட்சம் : ஓடவள்ளி

தீர்த்தம் : நாகதீர்த்தம்

ஆகமம்/பூஜை : சைவம், வைணவம்

பழமை : 2000 வருடங்களுக்கு முன்

ஊர் : நாகர்கோவில்

மாவட்டம் : கன்னியாகுமரி

மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா: தை மாதத்தில் பிரம்மோற்ஸவம், ஆவணி ஞாயிறு, ஆவணி ஆயில்யம் நட்சத்திர நாட்களில் விசேஷ பூஜை, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை.


நாகர் வழிபாடு ஏன்?: சிவனுக்கு நந்தி, பெருமாளுக்கு கருடாழ்வார், விநாயகருக்கு மூஞ்சூறு, முருகனுக்கு மயில் என ஜீவராசிகளை சுவாமிகளின் வாகனமாக்கி வழிபடுகிறோம். இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனியே கோயில்கள் அமைத்து வழிபடும் வழக்கம் இல்லை. ஆனால், நாகத்திற்கு சன்னதி அமைத்து வணங்குகிறோம்.

நாகர் வழிபாடு, மனித வாழ்விற்கான உயர்ந்த தத்துவத்தை உணர்த்துகிறது.புழுதியில் சென்றாலும், நாகத்தின் மீது தூசு ஒட்டுவதில்லை. அதாவது தான் எதில் இருந்தாலும், அதை தன்னில் ஏற்றுக்கொள்ளாத தன்மையுடையதாக நாகம் இருக்கிறது. மனிதர்களும் மனைவி, மக்கள், பொன், பொருள் என எல்லாவற்றிலும் உழன்றாலும், அவற்றின் மீதும் பற்றில்லாதவர்களாக வாழ வேண்டும் என்பதை நாகம் உணர்த்துகிறது.

ஓலைக்கூரை சன்னதி: மூலஸ்தானத்தில் நாகராஜர், ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். சிவன் கோயில்களில் சண்டி,
முண்டி என்பவர்களும், பெருமாள் கோயில்களில் ஜெயன், விஜயன் என்பவர்களும் துவாரபாலகர்களாக இருப்பர். ஆனால், இக்கோயிலில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்னும் பெண் நாகமும் துவாரபாலகர்களாக உள்ளன. நாகராஜாவிற்காக அமைந்த தலம் என்பதால், நாகங்களையே துவாரபாலர்களாக அமைத்துள்ளனர். நாகராஜர் சன்னதி எதிரிலுள்ள தூணில், நாககன்னி சிற்ப வடிவில் இருக்கிறாள். தற்போதும் இங்கு நாகங்கள் வசிப்பதாகவும், இவையே இக்கோயிலைப் பாதுகாப்பதாகவும் சொல்கிறார்கள்.

நாகங்கள் வசிப்பதற்கேற்ப மூலஸ்தானத்தை ஓலைக்கூரையால் வேய்ந்துள்ளனர். ஆடி மாதத்தில் இதைப் பிரித்து,
புதிய கூரை வேய்கின்றனர். நாகராஜருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களே கூரை கட்டும் பணியைச் செய்கின்றனர்.


தோஷ நிவர்த்தி: பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவைத் தாங்கும் ஆதிசேஷன், அவர் ராமனாக அவதாரம்
எடுத்தபோது தம்பி லட்சுமணராக பிறந்தார். எனவே, லட்சுமணரின் நட்சத்திரமான ஆயில்யத்தன்று நாகராஜாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் நாகராஜாவிற்கு பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள்.

இதுதவிர, தினமும் காலை 10 மணிக்கு பாலபிஷேகம் நடக்கும். நாகராஜரிடம் வேண்டி கோரிக்கை நிறைவேறியவர்கள் பால்
பாயாசம் படைத்தும் வழிபடுகிறார்கள். கோயில் வளாகத்திலுள்ள அரச மரத்தடியில் நாகர் சிலைகளை வைத்தும் நேர்த்திக்கடன்
செலுத்துவதுண்டு.

நிறம் மாறும் மணல்: மூலஸ்தானத்தில் நாகராஜர் இருக்குமிடம் மணல் திட்டாக இருக்கிறது. வயல் இருந்த இடம் என்பதால், இவ்விடத்தில் நீர் ஊறிக் கொண்டிருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணலையே பிரசாதமாகத் தருகிறார்கள். தட்சிணாயண புண்ணிய காலத்தில் (ஆடி முதல் மார்கழி மாதம் வரை) இந்த மணல் கருப்பு நிறத்திலும், உத்தராயண புண்ணிய காலத்தில் (தை முதல் ஆனி வரை)
வெள்ளை நிறத்திலும் இருப்பது சிறப்பு.


ஆவணி ஞாயிறு விசேஷம் ஏன்?: இந்தக் கோயிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதற்கான
காரணம் என்ன தெரியுமா? ஆவணி மாதம் மழைக்காலமாகும். இக்காலத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகமிருக்கும். இவற்றால்
விவசாயிகளுக்கு துன்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆவணியில் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாம்பு வழிபாடு மேற்கொண்டனர். நாகர் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து மகிழ்வித்தனர். ராகு வழிபாட்டிற்கு உகந்த கிழமை ஞாயிறு என்பதாலும், மலையாள ஆண்டில் முதல் மாதம் ஆவணி என்பதாலும், இந்த மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளை சிறப்பு வழிபாட்டுக்குரிய
காலமாக கொண்டனர் என்றும் ஒரு கருத்து உண்டு. கேரள முறைப்படி இக்கோயிலில் பூஜை நடக்கிறது.

பெருமாளுக்கு திருவிழா: நாகராஜர் சன்னதிக்கு வலப்புறம் அனந்தகிருஷ்ணர், காசி விஸ்வநாதர் சன்னதிகள் உள்ளன. தினமும்
நாகராஜருக்கு பூஜை செய்தபின்பு, இவர்களுக்கு பூஜை நடக்கும். அர்த்தஜாம பூஜையில் மட்டும், அனந்தகிருஷ்ணருக்கு முதல்
பூஜை செய்வர். இக்கோயிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்தகிருஷ்ணருக்கே கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. தை மாதத்தில் பிரம்மோற்ஸவமும் இவருக்கே நடக்கிறது. தைப்பூசத்தன்று இவர் தேரில் எழுந்தருளுவார். ஆயில்யத்தன்று ஆராட்டு வைபவம் நடக்கும். கிருஷ்ண ஜெயந்தி விழாவும் இவரது சன்னதியில் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

கொடிமரத்தில் ஆமை: பெருமாள் கோயில் கொடிமரங்களின் உச்சியில், கருடனை வடிவமைப்பர். இங்குள்ள அனந்த கிருஷ்ணர் சன்னதி கொடிமரத்தில் கருடனுக்குப் பதிலாக ஆமையை வடித்துள்ளனர். பாம்பும், கருடனும் விரோதிகள் என்பதால் கருடனை இங்குள்ள கொடிமரத்தில் வடிக்கவில்லை. அதற்குப் பதிலாக ஆமையை வடித்துள்ளனர். விசேஷ காலங்களிலும், மாதாந்திர ஆயில்ய நட்சத்திர
நாட்களிலும் அனந்தகிருஷ்ணர் ஆமை வாகனத்திலேயே புறப்பாடாகிறார். தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, மகாவிஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்ததன் அடிப்படையில் ஆமையை வடிவமைத்ததாகச் சொல்கிறார்கள்.


மகாமேரு மாளிகை: இது கிழக்கு நோக்கிய கோயில் என்றாலும், தெற்கு வாசலே பிரதானமாக இருக்கிறது. இந்த வாசலை, "மகாமேரு மாளிகை' என்று அழைக்கிறார்கள். மாளிகை வடிவில் உயரமாக அமைந்த வாசல் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. நாகராஜர் சன்னதியின் இடப்புறம் நாகர் தீர்த்தம் இருக்கிறது. ஓடவல்லி என்னும் கொடி இத்தலத்தின் விருட்சம். தற்போது இக்கொடி இல்லை. வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. இதில் பூக்கும் நாகலிங்கப் பூவை நாகராஜரின் குறியீடாகக் கருதி வழிபடுகிறார்கள்.

"அம்மச்சி" துர்க்கை: கோயில் வளாகத்தில் துர்க்கை சன்னதி இருக்கிறது. இச்சிலை இங்குள்ள நாகர் தீர்த்தத்தில் கிடைத்ததால் இவளை "தீர்த்த துர்க்கை' என்று அழைக்கிறார்கள். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் நாகராஜரையும், இவளையும் வழிபடுகிறார்கள். வயது முதிர்ந்த பெண்களை "அம்மச்சி" என்று மலையாளத்தில் அழைப்பது வழக்கம். இந்த
துர்க்கையையும், தங்களுக்கு வழிகாட்டும் பெரியவளாகக் கருதி, "அம்மச்சி துர்க்கை' என்று அழைக்கிறார்கள்.

தல வரலாறு: பெண் ஒருத்தி வயலில் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தாள். அவ்வேளையில், ஒரு கதிரில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. இதைக்கண்டு பயந்தவள், ஊருக்குள் சென்று மக்களிடம் கூறினாள். அவர்கள் இங்கு வந்தபோது, நெற்கதிருக்கு கீழே நாகராஜர் வடிவம் இருந்ததைக் கண்டனர். 

பின்பு நாகராஜரைச் சுற்றிலும் ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னதி அமைத்தனர். தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட களக்காடு மன்னர் மார்த்தாண்டவர்மா, இங்கு வந்தார். சுவாமியை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றார். மகிழ்ந்த மன்னர் இங்கு பெரியளவில் கோயில்
எழுப்பினார். சுவாமியின் பெயரால் இந்த ஊருக்கும், "நாகர்கோவில்"  என பெயர் வந்தது. தமிழகத்தில் நாகர் (பாம்பு) வழிபாட்டிற்கென
அமைந்த பெரியகோயில் நாகர்கோவில் மட்டுமே ஆகும்.

சிறப்பம்சம் : இங்கு நாகராஜசுவாமிகள் சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார்கள்.

Kanyakumarians Posted by Kanyakumarians


views: 12683
   

Leave a Comment

Note: HTML is not translated!

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs