Collectorate Junction, Nagercoil

வெயில், மழை மற்றும் புளுதி, புகையை என தங்களது வாழ்நாள் முழுக்க ரோடுகளில் கழிந்து போகிறது இவர்களது வாழ்க்கை.

ஒரு பாதி நாள் வெயிலிலே நிற்கவேண்டும் என்கிற நிலை நமக்கு ஏற்பட்டால், நினைத்தாலே தலை சுத்துகிறது. அதுவும் இப்போது நாகர்கோவிலில் அடிக்கிற வெயில் சுட்டுப்பொசுக்கிறது .

நாகர்கோவில் ஆட்சியர் அலுவக சந்திப்பினை கடந்து போகும் போது ஒரு குறிப்பிட்ட போலீஸ்காரரை காண்கிற போதெல்லாம் மிகுந்த வியப்போடு பார்த்துச் செல்வேன்.

மிக கம்பீரமான சிங்கம் ஒன்று அந்த சந்திப்பில் வீறு நடை போடுவதைப் போலவே இருக்கிறது. ஒரு பத்து கிலோ பையினை வயிற்றில் கட்டி வைத்தது போல தொப்பையோடு காட்சி தருகிற காவலர்கள் மத்தியில் இவர் செம பிட்டாக கம்பீர காட்சியளிக்கிறார்.

நல்ல உயரம், கட்டுக்கோப்பான உடல் வாகு, பாரதி மீசை வலதும் இடதுமாக குத்திக் கொண்டு அழகு சேர்க்கிறது சிறப்பு தேர்வு நிலை உதவி காவல் ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு.

ஆட்சியர் சந்திப்பு; நல்ல திறந்த வெளி மட்டுமல்லாமல் போக்குவரத்து மிகுந்த பகுதி; அதில் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் போக்குவரத்தை சீர் செய்கிற பாணி "கவாத்து" நம்மை ஈர்க்கிறது. மற்ற போலீஸார்களிடமிருந்து இவர் வித்தியாசமாகப்படுகிறார்.

ஸ்டைலிஷாகவும், மிடுக்காகவும் நடப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். மிக நேர்த்தியாக போக்குவரத்து நெருக்கடியினை ஒழுங்கு செய்கிறார்.இவரை கடந்து செல்கிறவர்கள் வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் பாராட்டியும் செல்கிறார்கள்.

கைகுலுக்கலை நைசாக தவிர்த்துக் கொண்டு, சின்னதா ஒரு விஷ் செய்து அவரோடு உரையாடலை ஆரம்பித்தேன்.

"அகஸ்தீஸ்வரம் பக்கத்தில் இருக்கிற புவியூர் தான் எனது சொந்த ஊர். எனக்கு இரண்டு குழந்தைகள் மகளை கட்டி கொடுத்தாச்சு, மகன் யுனைடெட் அஷ்சூரன்ஸ் காப்பீட்டு கம்பனியில் அதிகாரியா வேலை பார்க்கிறார். சாதாரண காவலராகத் தான் வேலையில் சேர்ந்து இன்று தேர்வு நிலை சிறப்பு உதவி ஆய்வாளராக உயர்வு பெற்றுள்ளேன்".

"எங்க வேலைங்கிறது மழையிலும் வெயிலும் மிக கஷ்டமானது தான், அதனை நான் எனக்கான தனி பாணியில் ரோட்டில் நடந்து கொண்டே செய்கிறேன். நான் அதனை கொஞ்சம் ரசனைக்குறியதாக மாற்றியதால் எனக்கும் உங்களுக்கும் உற்சாகமாக மாறியுள்ளது" என சிரிக்கிறார்.

நடையை அளக்கிற பெடா மீட்டரை அவரிடம் கொடுத்து இதனை உங்க சட்டையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சென்றுவிட்டேன். பின் ஒரு மணிநேரம் கழித்து போய் வாங்கி பார்த்தேன்.

அப்பாடா... மனிதர் சுமார் மூன்று கி.மீ ஒரே பீட்டில் நடந்துள்ளார்.

"ஆமாம். எனக்கு காலில் வெரிக்கோஸ் வந்திட்டுது சின்னதா ஆப்ரேஷன் வேறு செய்திருக்கிறேன்.
சந்தோஷமா வேலை பார்க்கிறதால வலியும் சுகமாக இருக்கிறது" என்கிறார்.

"உடல் கட்டுகோப்பு பற்றி சொல்லுங்களேன்?" என்றேன். "எனது பணியிலேயே இத்தனை தூரம் நடப்பதால் தனியாக பயிற்சி ஒன்றும் நான் எடுப்பதில்லை. மேலும் வாழ்க்கையில் இதுவரை மது, புகை என எந்தவித பழக்கமும் நான் பழகவில்லை" என்றார்.

"கோபப்படுவது உண்டா?" என்றேன்.
"அத்தனை சிரமபட்டு போக்குவரத்தினை சரி செய்துக் கொண்டிருப்பேன், சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும், எல்லாரும் வாகனத்தில் காத்திட்டுருப்பாங்க, ஒருத்தன் மட்டும் வேகமா விருட்டென்று பைக்கில் கிளம்பி யாரையும் பொருட்படுத்தாமல் போவான் பாருங்க, அப்போ வரும் கோபம்" என்கிற போது மீசை குத்திட்டு நிற்கிறது. "வீட்டுல கோபமே படமாட்டேன் நான் பரமசாது" என்கிறார் பாலகிருஷ்ணன்.

"போலீஸ் உங்கள் நண்பன் என்கிறர்களே.. நீங்கள் எப்படி?"
ஒருநாள் டூயூட்டியில் ஒரு கேரள பதிவு கார் ஒன்று மூன்று தடவைக்கு மேலாக, திரும்ப திரும்ப சுத்தி சுத்தி வந்து கொண்டிருந்தது. அருகில் போய் என்ன விசயம் என்று அவர்களிடம் விசாரித்தேன். இரவு விடுதியில் அறை எடுத்துள்ளனர் பின்னர் ஊர் சுற்றிப்பார்க்க கோவில் குளமென்று சுற்றுலா சென்று திரும்பியவர்களுக்கு அவர்கள் தங்கிய விடுதி பெயர் தெரியவில்லை, சாவியிலும் விலாசம் இல்லை. இடம் தெரியாமல் திகைத்துப் போய் ஊரையே சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எனது டூயூட்டி முடிகிற நேரமாதலால் எனது பைக்கில் அந்த வாகனத்தில் வந்தவர்களில் ஒருவரை அழைத்துக்கொண்டு ஒரு வழியாக அந்த குறிப்பிட்ட விடுதியினை கண்டுபிடித்து" அவர்களை சேர்ப்பித்தேன்.

"சினிமா பார்க்கிற பழக்கம் உண்டா?" என் கேட்டேன்
நான் பெரிய சிவாஜி ரசிகன் சார். இப்போ எல்லாம் தொலைக்காட்சியில் தான் சினிமா பார்ப்பதோடு சரி. நான் ஆயுத படையில் வேலை பார்க்கும் போது எங்களது படையணியின் விழாக்களில் கட்டபொம்மன், அரிசந்திரன், சிவாஜி வேசத்தில் நடித்தும் இருக்கிறேன்" என்கிற போது பாலகிருஷ்ணன் என்கிற உதவி ஆய்வாளர் மிடுக்கின்றி சாதரண ரசனைக்குறிய மனிதராக மிளிர்கிறார்.

"போக்குவரத்து காவலர் என்கிறதால் கைநீட்டும் பழக்கம் உண்டா?" என்றேன். "பல வருடங்களுக்கு முன் எனது மகன் வளர்ந்து வருகிற நேரத்தில் இதே கேள்வியை என்னிடம் கேட்டான். அன்று ஏதோ ஒரு உள்ளுணர்வு என்னை காயப்படுத்தியது அன்றிலிருந்து இன்றுவரை கைசுத்தமாகவே இருந்து வருகிறேன் அதில் ஒரு ஆத்ம திருப்தியை உணர்கிறேன் இப்போது" என்கிற போது பாலகிருஷ்ணன் என்கிற காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சம் நிமிர்த்தி வீறு நடை போடுவது அர்த்தமுள்ளதாகிறது.

விபத்தில்லா பயணத்திற்கு உங்கள் அனுபவத்திலிருந்து டிப்ஸ் ஏதாவது சொல்லுங்கள் என்றேன் . அத்தனைக்கும் வேகமே காரணம்,சாலை விதிகளை கடைபிடித்தாலே பாதி விபத்துகளை நாம் தவிற்கலாம், மேலும் ஏதிரில் வரும் வாகனங்களை ஓட்டி வருபவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள்,வாகனம் ஒழுங்காக ஓட்ட தெரியாதவர்கள் என்ற கற்பனையோடு நாம் கவனமாக ஓட்டினால் போதும் முற்றிலுமாக விபத்தின்றி வாழலாம் என்றார்.

தான் செய்கிற தொழிலினை வாஞ்சையோடும், ரசனையோடும், அர்ப்பணிப்போடும். செய்யும் எந்த தொழிலும் தலை வணங்குதலுக்குறியதாக மாறிவிடுகிறது.
அந்த வகையில் பாலகிருஷ்ணன் என்கிற மனிதருக்கு "ராயல் சல்யூட்" அடித்து 'keep it up sir' என்ற வாழ்த்துதலோடு விடை பெற்றேன்.

Courtesy: Jawahar ClicksShowing 1 to 1 of 1 (1 Pages)