கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று 65-வது பிறந்தநாள்


தமிழ்நாட்டுடன் நாங்கள் இணையவில்லை என்றால் തിരുവട്ടാര്‍ സിന്ധുകുമാര്‍ என்று மலையாளத்தில் நான் முகநூலிலும், ஏதாவது பத்திரிகையிலும் எழுதிக்கொண்டிருந்திருப்பேன். அன்றைய தென் திருவிதாங்கூர் சர்க்கார் தமிழர்களை அன்று செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்திய விதம் கண்டு அன்று பொங்கியெழுந்த மார்ஷல் நேசமணி உள்ளிட்ட தலைவர்களின் போராட்டங்களின் விளைவால் தான் இன்று தமிழ்நாட்டுடன் இணைந்த குமரிமண்ணில் தமிழ்க்காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கிறோம். குமரி மண்ணில் நாங்கள் இணைய துப்பாக்கிச்சூட்டால் உயிர் இழந்தவர்கள் 9 பேர் என்கிறது அரசு. ஆனா அதற்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள் என முதியவர்கள் கூறுகின்றனர். கடலைப்பார்க்க வேண்டுமா? இங்கே பார்க்கலாம். மலையைப்பார்க்க வேண்டுமா? இங்கே பார்க்கலாம். வயல்வெளியைப்பார்க்க வேண்டுமா? இங்கே பார்க்கலாம். காட்டைப்பார்க்கவேண்டுமா இங்கே பார்க்கலாம். ஆக பாலை தவிர குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களை தன்னகத்தே கொண்டு செழிப்பாக காணப்படுகிறது எங்கள் மாவட்டம். கடின உழைப்பாளிகளான மக்கள்.எதற்கும் அஞ்சாத உழைப்பாளிகளின் உழைப்பால் தான் இன்று குமரி சிறந்து விளங்குகிறது. உலகின் எந்த ஊருக்குச்சென்றாலும் குமரி மக்களைக்காணலாம். . கேரளாவை எடுத்துக்கொண்டால் இன்று சுற்றுலாத்துறை முன்னேறி இருக்கிறது. திருவனந்தபுரம் அருகே உள்ள வேளி ஒரு காலத்தில் வெறும் கடலோரம். ஆனால் இன்று சூப்பர் சுற்றுலாதலம். இங்கே சிதறால் மலைக்கோயில், திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி, மாத்தூர் தொட்டிப்பாலம், வட்டக்கோட்டை என எண்ணற்ற சுற்றுலாத்தலங்கள். இவற்றை எப்படி எல்லாம் மேம்படுத்தியிருக்கலாம்.? ஆனால் செய்யவில்லையே. இன்று பத்மனாபபுரம் எந்த வித பழமையும் மாறாமல் பராமரிப்புடன் இருக்க காரணம் கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான்.(தமிழக அரசின் கையில் இருந்திருந்தால் இங்குள்ள கட்டில்கள் மந்திரிகளின் வீட்டில் இருந்திருக்கும்). இங்கே ரப்பர் வளம் கொட்டிக்கிடக்கிறது. ஒவ்வொரு அரசும் வரும்போது ரப்பர் தொழிற்சாலை அமைப்போம் என்று கூறும். அப்புறம் அதை மறந்துவிடுவார்கள். ஆனால் இங்குள்ள தனியார் தொழிலதிபர்களால் ரப்பர் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு சிலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது. இரண்டு பட்டம் பெற்றவர்கள் இங்கே சாதாரணம். கூலி வேலைக்காரரின் பிள்ளைகள் பி.இ., எம்பி.ஏ. படிப்பதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. கடன் வாங்கியாவது பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கிறார்கள். குமரி மாவட்டத்துடன் இணைந்திருப்பதால் நிறைகள் நிறைய அதிகம் இருக்கும் அதேவேளையில் குறைகளும் நிறைய இருக்கின்றன. மாவட்ட மக்களில் பலரும் படித்து விட்டு வெளியூருக்கும், வெளிநாடுகளுக்கும் வேலை தேடிச்சென்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள். வேலைவாய்ப்புத்தரும் திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்தியிருந்தால் பலருக்கும் வேலை கிடைத்திருக்கும். அரசு நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் கன்னியாகுமரித்தமிழன் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறான். கடவுளின் செல்லக்குழந்தை என்பதால் தொழில்வளர்ச்சியில் வளர்ச்சியில் வளர்ச்சியற்ற குழந்தையாகவே கன்னியாகுமரிமாவட்டம் இருக்கிறது என்ற வருத்தம் எனக்கு நிறையவே உண்டு. எப்படியாயினும் நாங்கள் தமிழ்நாட்டுடன் இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இங்குள்ள மலையாளிகளும் தமிழ்நாட்டுடன் இருப்பதால் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களின்பிள்ளைகள் தமிழ் படிக்கின்றனர். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

திருவட்டாறு சிந்துகுமார் Posted by திருவட்டாறு சிந்துகுமார்

Reporter at Kumudam No.1 Tamil Weekly

views: 7874
   2

 

News Discussion

Leave a Comment

Note: HTML is not translated!