For Advertising... Please Contact - 9940542560

பசியின் துரத்தல் கண்களில் தெரிகிறது - Jawahar Clicks

     |   


உலகையே அச்சுறுத்தும் அதிதீவிர கொரோனா வைரஸ் பரவுகிற இந்த Pandemic காலத்தில் புகைப்பட பத்திரிகையாளரான எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

எனது இத்தனை வருடகால அனுபவத்தில் சுனாமி, ஓக்கிபுயல், தற்போது கொராணா வைரஸ் தாக்குதலால் ஊரடங்கு காலம் என்கிற வரை பல களபணி அனுபவங்களை நான் பெற்றுள்ளேன்.

சுனாமி பேரலை கடற்கரையில், மக்களையும் அவர்களது வாழ்விடத்தையும் அழித்து நிர்மூலமாக்கியிருந்தது.அது போலவே ஓக்கி புயல் குமரி மாவட்டத்தில் பல வேறு பகுதிகளில் வாழும் மக்களையும்,அவர்களது வாழ்விடத்தையும் மற்றும் உடமைகளையும் பயிர்களையும் அழித்து துவம்சம் செய்திருந்தது.

இவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசப்படுகிறது இந்த கொராணா வைரஸ் தாக்குதல். உலகம் முழுவதும் கொத்து கொத்தாக மக்களை கொன்றொழிக்கிறது. ஆனால் இப்போது மக்களின் வாழ்விடமான இந்த பூமி எந்த விதமான சேதாரமின்றி பாதுகாப்பாகவும் புதுப்பிக்கபடுகிறதாகவும் மாறிவருகிறது.

எல்லா நிகழ்விலும் நான் பெரும் துயரங்களையும் அழுகைகளையுமே காட்சிகளாக பதிவு செய்து வந்திருக்கிறேன்.என் வாழ்வில் அழகியலை பெரியளவு பதிவு செய்யும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லையோ என்றுக்கூட நான் நினைப்பதுண்டு.

இந்த ஊரங்கு காலத்தில் எனது கேமிராவின் மூலம் நான் பார்க்கிற காட்சிகள் இயங்காத நகரங்கள்,பரபரபற்ற சாலைகள் ஓய்ந்து போன வீதிகள். வெற்று கான்கிரீட் கட்டிடங்களும், இருபக்கங்களும் வெள்ளை கோடுகள் போட்ட கருத்தபோன ரோடுகளும், மக்களுக்கான சாலை விதிமுறை போர்டுகளும், ஸீப்ரா கிராசிங்களும்,வெறுமனே எரிகிற சிகினல்களும்,ஆள் அரவமற்ற கடை வீதிகளும் மட்டுமே.
இவைகளிலெலாம் எனக்கு ஒருவித வெறுமையை என் கண்களில் காட்சியாகபட்டது. இப்போது நான் அதனையும் தாண்டி வெருமையையினுடே சில காட்சிகளையும் காணமுடிந்தது. அவர்கள் சாலைகளில் காத்திருக்கும் ஜனங்கள் இவர்களெல்லாம் யார்?மில்லியன் கேள்விகளோடு அவர்களை நெருங்கி படப்பதிவுகளோடு உரையாட ஆரம்பித்தேன்.

அன்றாடம் பிழைப்பை தேடி ஊர்விட்டு வெளியூர்வந்தவர்கள் இவர்கள் சுமை தூக்குகிறவர்களாக, சித்தாள் வேலைசெய்பவர்களாக, ஹோட்டல் தொழிலாளர்களாக,சாலையோர வியாபாரிகளென தங்களது வாழ்கையை ஜீவிதத்தை கழித்து வந்தவர்கள்.

இன்னொருசாரார் பெற்ற குழந்தைகளால் தெருவில் கைவிடப்பட்ட வயோதிக பெற்றோர்கள்.இவர்களைவிட மிக பரிதாபமானவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். இவர்களை இரண்டு வகைப்படுத்தலாம்.ஒரே இடத்தில் நிலையாக வெறித்துப் போன நிலைகுத்திய பார்வையோடு ஏதோ சிந்தனை வயப்பட்டவர்களாக மண் தரையினை கிளறியவாறு அமர்ந்திருப்பவர்கள். இன்னொரு வகையினர் நிலையில்லாமல் புலம்பியபடியோ இல்லை மவுனமாக அலைந்து திரிகிறவர்கள்(ரோமிங்கில் இருப்பவர்கள்). இப்படியான மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பலரும் யாரிடமும் யாசகம் செய்பவதில்லை,தனக்கு பசிக்கிறது என கேட்டு பெறாதவர்கள்.

ஏதாவது இவர்களுக்கெல்லாம் செய்ய வேண்டும் என மனம் வாதாடியது.புகைப்படங்கள் எடுப்பதை தாண்டி உதவ வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம், இவர்கள் பசியோடு இருக்கிறார்கள்,
என்பதனை உணர்ந்தவாரு நண்பர்களோடு களம் இறங்கினேன்.

நான் உணர்ந்தது மாதிரியே நண்பர் பிரபு தர்மராஜ் க்கும் தோன்றியிருக்கிறது.எங்களை விட கூடுதலாக தம்பி ஜெயின் டேவிட் க்கும் தோன்றல் உருவாகியிருந்தது. ஒன்று கூடி செயல் திட்டங்களை தீட்டினோம், பொருளாதார ஆதாரத்திற்கு வழியேற்படுத்தியாக வேண்டும். உணவிற்கு ஏற்பாடுகளை செய்தோம். பிரபுவின் நீண்டகால நண்பர் 'சுதீர் பாய்' தனது உணவகத்தில் உணவுகளை தயார் செய்து தர உற்சாகத்தோடு சம்மதித்தார்.

தினசரி காலை உணவு வழங்க நண்பன் ஜானும் எங்களோடு வந்து சேர்ந்து கொண்டான். நாகர்கோவில் வெற்று சாலைகளில் வயிற்றில் பசியை கட்டிக்கொண்டு காத்திருக்கும் நபர்களை தேடி இப்போது உணவுப் பொட்டலங்களோடும் தண்ணீர் பாட்டில்களையும் தூக்கிக் கெண்டு பயணப்படுகிறோம்.

அவர்களுக்கும் எங்களுக்குமான உறவு தினசரி சந்திப்புகளில் நெருக்கமாகிப் போனோம். இப்போது லெச்சுமி பாட்டியை காணாவிட்டால் கடை வீதிகளில் எங்கள் கண்கள் அவரை தேடுகிறது, மலர் அக்காவை தினசரி குளிக்க சொல்லி திட்டுகிறோம்,நெருக்கமாக இருக்க கூடாதென அறிவுருத்துகிறோம்.ஏதோ இனம்புரியாத ஒன்று எங்களுக்குள்ளும் அவர்களுக்குள்ளுமாக இயங்குகிறது.

அது கருணையாக இருக்கலாம் இல்லை அதன் பெயர் அறம் என்றுக்கூட இருக்கலாம்.

வெளியூர் வாசிகள் எப்போது நாங்கள் ஊருக்கு போகமுடியும் என கேட்கிறார்கள். நான் நல்லா சமையல் செய்வேன் ஐயா ஏதாவது எனக்கு வேலை கிடைக்குமா என்கிறார் ஒருவர். நான் இந்தியாவின் பல பிரதமர்களை பார்த்தவன் இதே மாதிரியான அசாதாரணமான சூழலை நான் ஒரு போதும் பார்த்ததில்லை என்கிறார் ஒரு பெரியவர். இரயில்கள் இத்தனை நாட்கள் முடங்கியதே என் வாழ்நாட்களில் பார்த்ததே இல்லை என்கிறார் கோதர்நாத் வரை சென்றுவந்த பாதி ஜென் நிலையில் தத்துவங்களை உதிர்க்கும் பத்ரிநாத். சாராயத்தை ஒளித்து விற்பது மாதிரி ஒருவர் வந்து அதோ அந்த சந்தில் வைத்து விற்கிறார் 'சார்' பத்துரூபா இருந்த கொடுத்துட்டுப்போ என்கிறார் சென்னை சிந்தாரிப்பேட்டை ராமண்ணா. கொராணாவும் கிடையாது ஒரு வைரஸும் கிடையாதுங்க அப்படி பார்த்தா நாங்கெல்லாம் இந்த புழுதியில தானே கிடக்கிறோம், இத்தனை நாட்களில் எங்களுக்கெல்லாம் வந்திருக்கனுமே, இல்லை அதோ அந்த குப்பையும் ஓடையும் தோண்டிகிட்டு போகிற தூப்புகாரங்களுக்கு வந்திருக்கனுமேன்னு நரைத்த தாடியை அலைந்தபடி சந்தேகத்தை கிளப்புகிறார் ஒரு பெரியவர்.

ஊரடங்கு இன்னும் நீண்டு கொண்டே போகிறது.நாங்களும் களத்தில் பல அனுபவங்களோடு பயணப்படுகிறோம். இப்போது நாங்கள் வழக்கத்துக்கு மாறான புதிய மனிதர்களை ரோடுகளில் காண்கிறோம். இவர்களது உடைகள் சுத்தமானதாக தெரிகிறது,ஏதோ ஒரு சின்ன தங்க உருப்படிகளாவது அணிந்திருக்கிறார்கள். முக்கிய சாலைகளின் அருகாமையில் தொடும் சின்ன முடுக்குகளில் இருந்து வெளி வந்து, குட்டி குருமுட்டிகளோடு காத்து நிற்கிறார்கள். சாலையில் செல்லும் வாகனங்களை கூர்ந்து கவனிக்கிறார்கள்.அவர்களது கண்கள் நமது கைகளில் உணவு இருக்கிறதை தெரிந்தால் ஓடி வருகிறார்கள். முகங்களில் ஒருவித கூச்சமும் தயக்கமும் தெரிகிறது. இவர்களும் எளிய மனிதர்களாகவே தெரிகிறார்கள். பேச்சு கொடுத்தால் கண்கள் கலங்கி போகிறார்கள்.

இவர்கள் பெரிய பெரிய மாடி வீடுகளின் அருகாமையில் இருக்கும் குச்சில்வீடு அல்லது குடிசை வாசிகளாகும். அரசு கொடுத்த இலவச பொருட்கள் தீர்ந்துவிடவே வருமானமும் இல்லாமல் உணவினை தேடி வீதிக்கு வர ஆரம்பித்துள்ளனர். இந்த ஊரடங்கு இன்னும் எத்தனை பேர்களை வறுமையும் பசியும் துரத்த வீதிகளில் கையேந்தி நிற்க வைக்கப் போகிறது என தெரியவில்லை. இப்போது ஊரடங்கு அடித்தட்டு மக்களை இன்னொரு பரிதாப நிலைக்கு தள்ளுகிறது, இன்னும் இதே நிலை நீடிக்குமானால் என்னை மாதிரியான நாடுந்தரவாசிகளைகூட பசி என்பது நிச்சயம் தகர்க்கும்.

அரசு மக்களுக்கு இன்னும் எந்த வித வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் தரவில்லை என்பதே என் குற்றச்சாட்டு.

(10-04-2020 அன்று குமரி மாவட்ட கலை இலக்கிய பெருமன்றம் ஏற்பாடு செய்திருந்த,கொராணா அறிவியலும் அரசியலும் என்கிற மெய் நிகர் உரையாடல் சந்திப்பில் எனது களப்பணி என்கிற அனுபவ பதிவு).

Courtesy: Jawahar Clicks

     |