For Advertising... Please Contact - 9940542560

அந்தநாள் ஞாபகம் வந்ததே ……

Schools in Nagercoil  |      3  |   

அந்தநாள் ஞாபகம் வந்ததே ……


நான் எஸ்.எல்.பி. பள்ளியில் படிக்கும்போது, செட்டிக்குளம் பீச்ரோட்டில் ஒரு வீட்டில் வசித்துவந்தோம். ஆகவே மதிய உணவு கொண்டு போவது வழக்கம். அப்போது என் அம்மா தூக்குவாளியில் (அக்காலத்தில் இதுதான் பள்ளிக்கூடத்துக்கு மதியஉணவு கொண்டு செல்லும் டிஃபன் பாக்ஸ்) உணவு தந்து விடுவார்கள்.

அதில் அநேகமாக பழையசாதமும், மோரும், ஊறுகாயும் அல்லது, சுண்டல் கறி (முந்தையநாள் மீந்து போன கறி யை சுண்ட வைத்தது இருக்கும்) அல்லது காலையில்சுட்ட தோசை அல்லது, இட்டிலி, ஆப்பம் புளிசாதம்-கொத்துமல்லி துவையல் இவற்றில் ஏதாவது இருக்கும். இந்த குத்துபோணிகள், டிஃபன் பாக்ஸ்கள் மட்டுமல்ல, அமுத சுரபிகள்/ நட்பு, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளங்களும் ஆகும்.

மத்தியானம் மணியடித்ததும், எல்லோரும் அவரவர் சாப்பாட்டு பாத்திரங்களை எடுத்துக்கொண்டு ஒரு இடத்தில் கூடி பகிர்ந்து உண்ணுவதுண்டு. அப்போது சாப்பாடு கொண்டுவராதவனுக்கும்/கொஞ்சமாக கொண்டு வந்தவனுக்கும் உணவு சரியாக கிடைத்து விடும். அப்போது எங்களுக்கு ஜாதி-மதத்தைப்பற்றி எந்த உணர்வுமே கிடையாது. என் பெயர் ஜமால், மற்றவன் பெயர் ஐயப்பன் இன்னொருவன் பெயர் பால்ராஜ் , இதுபோல் பல பெயர்கள். அவ்வளவுதான். வேறு எந்த வித்தியாசமும் மனதில் வந்ததே கிடையாது. அப்போது எங்கள் நோக்கமெல்லாம், சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு, மைதானத்தில் பந்து விளையாடுவது தான். என்னிடத்தில், அனுபம்கேர் (Anupam Kher) தலையைப்போல் ஒரு வழுக்கைடென்னிஸ் பந்து இருந்தது. அதைவைத்துக்கொண்டு நட்டநடு வெயிலில் அடுத்த வகுப்புக்கு மணியடிக்கும் வரை விளையாடு வோம். (பந்து கொண்டு வரவில்லையென்றால், ஒரு கைக்குட்டையை பந்தாக்கி விளையாடுவோம். அல்லது கூடைப்பந்து மைதானத்தின் கரையில் நிறைய புன்னைமரங்கள் இருந்தன. அவற்றிலிருந்து சில புன்னங்காய்களை பறித்து அவற்றை பந்தாக பாவித்து விளையாடுவோம்.) வெறும் பழயசாதத்தை சாப்பிட்டுவிட்டு சுட்டெரிக்கும் வெயிலில் விளையாட அவ்வளவு சக்தி இருந்தது. எங்கள் புத்தகங்களெல்லாம், ஒரு மஞ்சப்பை போன்ற துணிப்பைக்குள் அடங்கிவிடும். . டியூஷன் கிடையாது, ஒரு சில புத்தகங்களே இருந்தன. இருந்தாலும் இந்த அரசாங்கபள்ளியில் படித்துதான் வாழ்க்கையின் பலதுறைகளிலும் முன்னிற்கிறோம்.

முன்பெல்லாம் நாகர்கோவிலில் அடைமழை பெய்யும். பள்ளி முடிந்ததும் பலதடவை மழையில் நனைந்துகொண்டே வீட்டுக்குப்போயிருக்கிறோம். அதனால் உடம்புக்கு ஒரு பிரச்சினையும் வந்தது இல்லை. வழியில் நம்மை தினந்தோறும் பார்ப்பவர்கள் கரிசனத்துடன் கேட்பார்கள். இது அவர்கள் சமூக அக்கறையை காட்டுகிறது. வீட்டுக்கு வந்ததும், அம்மா "மழை நின்றபிறகு வரக்கூடாதா" என்று திட்டிக்கொண்டே டவலால் தலையை துடைத்து ஜலதோஷம் வராமல் இருக்க சுக்கு காப்பி போட்டு தருவது இன்னும் அருமையான அனுபவம்.

ஆக, அன்று காசு-பணம் இல்லாமலிருந்தாலும், மகிழ்ச்சியுடனும், நட்புடனும், ஆரோக்கியத்துடனும் இருந்தோம். ஆனால் இன்றைய அவசரமான உலகத்தில் வருமானம், வசதிகள் பெருகிய பின்னும் மக்கள் முன்புபோல் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்களா என்றால், பதில் சொல்வது கடினம் தான்.


Courtesy: Jamaludheen Masthankhan



   3  |