For Advertising... Please Contact - 9940542560

சம்பங்கி எண்ணெய் - பஞ்சலிங்கபுரம்

     |   

கன்னியாகுமரி நால்வழிச்சாலையில் உள்ள பஞ்சலிங்கபுரம் என்ற ஊரில் கூடாரங்கள் போட்டு தங்கியிருந்தார்கள் இவர்கள். காலை வேளையிலேயே பரபரப்பாக ஆண்களும் பெண்களும் பாட்டில்களில் மூலிகைகளை அடைத்துக் கொண்டிருந்தனர்.

யார் இவர்கள்? என்ன மூலிகைகள் ? என்ற வினாவோடு அவர்கள் முன் நின்றேன்.


திண்டுக்கல் மாவட்டம் சேவுகம்பட்டி நிலக்கோட்டை தாலுகாவை சேர்ந்த முத்தலாபுரம் என்ற ஊரிலிருந்து குடும்ப சகிதமாக இவர்கள் வந்துள்ளனர்.

இனம் : இந்து அருந்ததியர் SC (a)
மொழி : கன்னடம்
குல தெய்வம் : குருவி சாமாயி அம்மன்
உணவு : அசைவம்

பல தலைமுறைகளாக முலிகை எண்ணெய் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.இதனை 'சம்பங்கி எண்ணெய்' என்கின்றனர். இந்த எண்ணெய் தயாரிக்கும் முறையினை தங்களது மூதாதையர்களிடமிருந்து பாரம்பரியமாக பெற்ற அறிவு என்கின்றனர்.


சம்பங்கி வேர், ஆவாரம்பூ, துளசி, வெட்டிவேர், ரத்தசந்தணம், இறாமச்சன் வேர், வெந்தையம், உளுந்து, ஆகியவற்றை பாட்டில்களில் அடைத்து விற்கின்றனர். இவற்றில் வாங்குபவர்கள் அவர்கள் அன்றாடம் தலையில் தேய்க்க பயன்படுத்தும் எண்ணெய்யை ஊற்றி நான்கு நாட்கள் ஊறவைத்து பின்னர் தலைக்கு தேய்த்து வந்தால், உடல்சூட்டினை தணிக்கும் மாமருந்துதாம், நரம்பு மண்டலங்கள் அனைத்தையும் சீராக்கும் என்கின்றனர் தேர்ந்த பாரம்பரை ஆயுர்வேத மருத்துவர்களைப் போல ஏதேதோ சொல்கின்றனர்.

(பயன்படுத்திய அனுபவத்தின் மூலமே இதன் பலன் மற்றும் பயன் பற்றி நாம் முடிவுக்கு வரவேண்டும்)

தென் மாநிலம் முழுவதும் இவர்கள் இந்த வியபாரத்திற்காக பயணப்படுகிறார்கள். இவர்கள் பிழைப்பை தேடி அலைகிறதால், குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் வாய்ப்புகள் இல்லாது போகிறது.

நமது தலையில் தேய்க்க எண்ணெய் தரும் இவர்களது குழந்தைகளை தலைகளில் எண்ணெய் தேய்க்காத செம்பட்டை தலைகளோடே நான் கண்டேன்.

"சாலையோரங்களில் கூடரங்கள் அமைத்து இப்படியாக புளுதியில் வாழ்வதில் சிரமமாக இல்லையா?" என்றேன். "வாழனும்ல்லா..." என்றார்கள்.

'ஊர்ஊராக சுத்துகிறீர்களே சிரமமா இல்லையா?' என்றேன்
'வாழனும்ல்லா...' என்றார்கள்.

'குழந்தைகள் தங்கள் படிப்பை தொலைக்கிறார்களே?' என்றேன்
'வாழனும்ல்லா...' என்றார்கள்.

உயிர் பிழைத்தல் மற்றும் வயிற்று பாட்டினை கழித்தல் என்கிற பிறப்பின் வழி; கிட்டிய விதியினை வெல்ல, ஊர் ஊராய் அலைகிறார்கள் இவர்கள் நாடோடிகளாக...

Courtesy: Jawahar Clicks

     |