For Advertising... Please Contact - 9940542560

தங்கம் தியேட்டர் - வடசேரி

Vadasery  |        |   

மீண்டும் நம் அபிமான நட்சத்திரங்களை வெள்ளித்திரையில் எப்போது காண்போம்?

நானும் அண்ணனும் சினிமா பார்க்க போக வேண்டுமானால் முதலில் அம்மாவின் முன்னாடி நின்று தலையை சொறிந்து கொண்டு மெல்ல ஆரம்பிப்போம். பின்னர் அம்மா அப்பாவிடம் பேசி சினிமா பார்ப்பதற்கான அனுமதியை பெற்று தருவார்கள். அதுவும் மாதத்திற்கு ஒரு முறைதான் இதெற்கிடையில் ஏதாவதென்றால் வாரியலடியே கிடைக்கும். மற்றப்படி பார்த்த படங்களெல்லாம் எல்லா மாணவர்களும் செய்கிற மதிநுட்பமான டெக்னிக்கின்படி வகுப்பை கட்டடித்து பார்த்த படங்களே அதிகம். அப்போதெல்லாம் சினிமா தியேட்டரில் படம் பார்க்க செல்வதென்றால் மிகப்பெரிய விடயமாக சந்தோஷம் தருகிறதாகவும் இருந்தது.

இன்றைய காலம் மாதிரியெல்லாம் ஆன்லைன் புக்கிங்கெல்லாம் கிடையாதே, ஷோ தொடங்குவதற்கு முன்னால் டிக்கட் கவுண்டரில் வரிசையில் நிற்க வேண்டும். இதில் பிரபல நாயகர்களின் படமென்றால் வரிசையில் தள்ளுமுள்ளுகள் வேறு. சிறிது காலதாமதம் ஆகிவிட்டல் போதும் ஹவுஸ்புல் என்கிற தகர போர்டை தொங்கவிட்டு விடுவார்கள். மனம் உடைந்து போகும் படம் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று பரிதவிப்பாய் போய்விடும்.பிளாக்கில் டிக்கெட் வாங்குவதெல்லாம் கட்டுபடியாகத செலவு.

டிக்கெட் வாங்கி உள்ளே போய்விட்டால் போதும், மனம் ஏதோ ஒரு சந்தோஷ நிலைக்கு வந்துவிடும். தியேட்டர் லாபியில் ஒட்டப்பட்டிருக்கும் சம்மந்தப் பட்ட படத்தினுடைய பிரத்தியேக பளபளக்கும் போட்டோ பிரிண்டுகளை வாய்பிளந்து நின்று பார்த்ததெல்லாம் அது ஒரு கனாக்காலமே.

இப்போ என் மகன் ஸ்மார்ட்போனில் குப்புற படுத்துகிட்டு படம் பார்க்கிறான் நெட்பிளிக்சிலும், அமேசான் பிரைம் வீடியோ, தொழில்நுட்பம் அவர்களின் கைகளில் கிடந்து தவழுகிறது. கழிந்த மே 29 அன்று ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் அமேசானில் உலகெங்கும் ஸ்டிரீமிங் ஆனது. அந்த காலங்களில் புதுப்படம் வருகிறதென்றால் நிளமான இரும்பு இரண்டு பைதா வண்டியில் போஸ்ட்டரை இரண்டுபக்கம் தெரிகிற மாதிரி வைத்துக்கொண்டு, செண்டை மேளம் முழங்க பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் ஊர்வலமாக நகர்முழுக்க வருவார்கள். "வருகிற சித்திரை ஒன்றுக்கு நெல்லை சென்ரல் தியேட்டரில் புத்தம் புதிய காப்பி 'அடிமைபெண்' திரையிடப்படும்" என்கிற அந்த காட்சி இன்றும் என் மனதில் ஊர்கிறது, பாளையங்கோட்டை சவுத்பஜார் தெருவில் நின்று என் சின்ன கண்களால் சினிமா என்கிற பிரமாண்டத்தை மிக பிரமிப்போடு பார்த்த காலம் அது.

இன்றைய கொராணா ஊரடங்கில் சினிமா தியேட்டர்கள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக நாகர்கோவிலின் மிகப் பழமையான (அழகப்பா டூயுரிங் தியேட்டர்) வடசேரி 'தங்கம்' தியேட்டருக்கு போனேன்.

ஹோ.....வென யாருமற்று கிடக்கிறது அந்த வளாகம், முன்று வாசல்களும் இழுத்து பூட்டி வைத்திருந்தார்கள். ஒற்றை கை மட்டுமே நுழையும் அளவுள்ள கிளி வாசல் டிக்கெட் கவுண்டர் தூசிபிடித்து கிடக்கிறது.தங்களது ஆதர்ஷ நாயகர்கள் நாயகிகளை தியேட்டரின் திரையில் தோன்றிய உடன் பணங்களையும் பூக்களையும் ஆர்பரித்து வீசியெரிகிற ரசிகர்பட்டளங்கள் இல்லாமல் வெருமனே மவுனமாக இருக்கிறது அந்த கான்க்ரீட் கொட்டகையும் அதன் விரியாத திரையும், ரசிகர்களற்ற இருக்கைகளும்.

குமரிமாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும் தங்கம் தியேட்டர் உரிமையாளருமான பெரியவர் சுப்பிரமணியன் அவர்களை சந்தித்தேன். சுதந்திர காலத்திற்கு முன்பே கட்டப்பட்ட தியேட்டர் இது."கலைவாணரின் தம்பி என்.எஸ். ராமையா வைத்திருந்த தியேட்டர். பின்னர், பலர் கைமாறி நான் 1981ல் இதனை வாங்கினேன். அப்பெல்லாம் பெஞ்சும் தரை டிக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு நவீன கருவிகள் வரவினால் தியேட்டரை புனரமைத்தேன். கார்பன் புரஜெக்ட்டராக இருந்ததை, ஆர்க் தொழில் நுட்பமாக மாற்றி பின்னர் dts சவுண்டு சிஸ்டத்தில் ஒலிக்க விட்டோம். தற்போது நவீன க்யூப் தொழில் நுட்பம் வரை கொண்டு வந்து விட்டேன். அன்று ஸ்பூல்களில் சுற்றி வரும் பிலிம்ரோல் ரீல் டப்பாக்களை மேளதாளத்தோடு ஆர்ப்பாட்டமாக தூக்கி வரப்பட்ட படங்கள் இன்று டிஜிடல் நுட்பத்தில் எங்கோ ஒரு கம்ப்யூட்டரில் திரையிட இங்கே காட்சிகள் திரையில் வெளியாகிறது. 891 பேர்கள் வந்தமர்ந்து பார்க்கிற தியேட்டரில் இன்று ஒரு ஷோவிற்கு சுமார் நூறு பேர்கள் வந்தார்களென்றால் அதிசயமே.

கழிந்த பத்து வருடங்களாகவே நாங்கள் ஆட்குறைப்பு செய்ய ஆரம்பித்து விட்டோம். கேண்டீனை வெளியாட்களுக்கு கொடுத்து விட்டேன். ஒவ்வொரு வகுப்பு வாசல்களில் டிக்கெட் கிழிக்க நிற்கிற ஆட்களையும் எடுத்துவிட்டேன். இப்படி ஆட்களை குறைக்க காரணமே தியேட்டரில் போதிய வருமானங்கள் இல்லாத போனதாலே தான். பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் படங்களை எடுப்பது கிடையாது, இதில் லாபம் எடுப்பதெல்லாம் மிக கஷ்டம். மக்கள் படம் பார்க்க வருவகிற பழக்கமும் வெகுவாக குறைந்து போனது. மேலும் இப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் படங்களை அதிக பணம் கொடுத்து எடுத்து திரையிட்டு லாபம் பார்க்கவே முடியாது. ஆனால் விஜய், அஜித் படங்கள் ஓரளவு கைகொடுத்துவருகிறது. மற்றபடி ஒரு தொழில் செய்ய வேண்டுமே என்கிற ஆதங்கத்தில் இந்தனை காலங்கள் நடத்திவந்தோம். இதில்வேறு 'பயர் சர்வீஸ்' காரர்களின் கெடுபிடி சட்டங்கள், மாநகராட்சி சட்டங்கள், அரசின் கேளிக்கை வரிகள் இன்னும் லைசென்ஸ் கெடுபிடிகள்" என எங்களது தியேட்டர் தொழில் என்பது நசிந்து போனது என்றார். குமரிமாவட்டத்தில் அன்று இருபத்தைந்து தியேட்டர்கள் இருந்தன அவையெல்லாம் காலசிரமத்தில் இன்று பலவும் திருமண மண்டபங்களாகவும் வணிக வளாகங்களாக மாறிப்போனது. இப்போது மாவட்டத்தில் வெறும் பதினோரு தியேட்டர்களே உள்ளன. இந்த ஊரடங்கிற்கு பிறகு எங்கள் தொழில் இல்லாமல்கூட போய்விடும் என்றே நினைக்கிறேன்.

"கடைசியாக சிபி சத்தியராஜ் நடித்த 'வால்டர்' என்கிற படம் திரையிட்டோம் படம்பார்க்க ஆட்களே வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் படம் ஓடவில்லை. இதற்கிடையில் ஊரடங்கு வேறு வந்து தியேட்டரை அடைத்து போட்டாகிவிட்டது.

எல்லா சிஸ்டங்களும் ஒழுங்கா வேலை செய்கிறதா என்பதை பார்ப்பதற்காக தினசரி வந்து இயக்கிப் பார்க்கிறேன், இல்லை என்றால் மூடிக்கிடக்கும் அரங்கில் எலிகள் புகுந்து அத்தனை வயர்கேபிள்களை கடித்து துண்டாக்கி விடும்" என்கிறார் தியேட்டர் ஆப்பரேட்டர் முருகன்.

அந்த வளாகத்தில் என்னை மிகவும் மனம்நோகடித்த காட்சி டிக்கெட் கிழிக்கும் நாகராஜனின் முகம். "கழிந்த முப்பது வருடங்களாக ராஜா போல நான் இங்கே இருந்தேன் சார், நிறைய மக்கள் படம்பார்க்க வருவார்கள் இந்த இடம் எப்படி கலகலப்பாக இருக்கும்? இப்போது கூவ கோழியுமில்லை குறைப்பதற்கு நாயுமில்லை" என்கிற போது, ஒரு சோக காட்சியை பார்த்து விட்டு மவுனமாக திரும்பிவருகிற, ரசிகனைப் போல கனத்த இதயத்தோடு திரும்பி வந்தேன்.

'End 'என்கிற கார்டு இடாமல் 'Interval' என்கிற கார்டினை இந்த கொராணா ஊரடங்கு காலம் அவர்களுக்கு திரையிட்டால் மட்டுமே தமிழ் நாட்டில் உள்ள தியேட்டர் தொழிலிகளில் பல வகைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் வாழ்க்கை பிழைக்கும்.

     |