For Advertising... Please Contact - 9940542560

நடமாடும் தெய்வங்கள் - Jawahar Clicks

மைலாத்தா இல்லை நல்லாத்தா

வழக்கமா நாங்க காலையில் உணவு வழங்க செல்கிற போது ஒரு தாயையும் மகனையும் சந்திப்போம்.

கைகளில் பெரிய இரண்டு தூக்கு வாளி நிறைய உணவுகளை எடுத்து வருவார்கள்.

சாலை ஓரத்தில் அமர்ந்திருக்கிறவர்களுக்கு வாழை இலை போட்டு, கைக்கரண்டியால் சாதங்களை அந்த அம்மா பரிமாற அவரது மகன் குழம்பு உற்றுவான்.

அவர்கள் உணவு வழங்குகிற இடத்தில் நாங்கள் தண்ணீர் பாட்டில்களை மட்டும் வழங்கிவிட்டு நகர்ந்து விடுவோம்.

பரஸ்பரம் எங்களுக்குள் ஒரு புன்னகையை மட்டும் பரிமாறிக் கொள்வோம். நான்கு நாட்களுக்கு முன் தம்பி பிரபு தர்மராஜ் அவர்களை புகைப்படமெடுத்தான்.அந்த அம்மா வேண்டாம் படமெடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.


தாயும் மகனோடும் பேசினோம். என்னோட பெயர் மைலாத்தா ராணித்தோட்டத்தில் வீடு இருக்கிறது. சொந்த ஊர் ஓட்டன்சத்திரம் எனக்கு தங்கை மகனோடு சேர்த்து இரண்டு மகன்கள் வளர்ந்து பெரியவர்களாக இருக்கிறார்கள். இவன் மஹேந்திரன் இரண்டாம் ஆண்டு அரசு கலைக்கல்லூரியில் படிக்கிறான்.

எங்களோட வாழ்க்கையில் ஒரு நேர சாப்பாட்டிற்கான பசி எப்படியான கொடுமையான விசயம் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

எனவே தான் பசியில் இருக்கிறவர்களுக்கு நம்மால் முடிந்த உணவை வழங்க வேண்டுமென்று முடிவு செய்தோம். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சமையல் செய்ய ஆரம்பித்து விடுவேன், எட்டு மணிக்கெல்லாம் பைக்கில் எடுத்து வந்து சாப்பாடு போட ஆரம்பித்து விடுவோம். கழிந்த இருபது நாட்களாக உணவளித்து வருகிறோம் என்கிற 'மைலாத்தா'வின் கலங்கிய கண்களில் ஒருவித நிறைவையும் எங்களால் காணமுடிந்தது .

தாயின் வடிவில் தெய்வத்தை பார்த்த பரவசத்தில் நாங்கள் வார்த்தைகளற்று நின்றோம்.

ஏன் தம்பிகளா எனக்கொரு உதவி செய்வீர்களா? நான் சமைத்து உங்கள் கைகளில் தந்து விடுகிறேன்,நீங்கள் அதனை கொடுக்க முடியுமா என்றார்கள்.

தாராளமாக நாங்கள் வழங்குகிறோம் என்றோம் உற்சாகமாக.
நூறு பார்சல் டப்பாக்களை வாங்கி அவர்கள் கைகளில் கொடுத்துவிட்டோம். தம்பி ஜெபா ஆல்வின் தினசரி அவர்களது வீட்டுக்கு போய் சாப்பாடுகளை வாங்கி வந்து விடுகிறான். ஜேயின் டேவிட் தனது வீட்டில் காய்த்திருந்த மாங்காய்களை பறித்து கொண்டு போய் ஊறுகாய் போட கொடுத்து வந்துள்ளான்.


இப்போது நான்கு நாட்களாக எங்களுடைய வழக்கமான அறுபது இட்லி பார்சல் கூடவே நல்லம்மா தந்துவிடுகிற நாற்பது சாப்பாடு பார்சல்களையும் சேர்த்து வழங்குகிறோம். ஒவ்வொரு நாளும் ஓவ்வொரு மெனு புளியோதரை,தயிர்சாதம்,சாம்பார்சாதம்,இட்லி சாம்பார் என வெரைட்டி.

இதில் வேறு தம்பிமார்களா நாளைக்கு என்ன சாப்பாடு ரெடி பண்ண வேண்டும் என்று கேட்டுதான் சமையல் செய்கிறார்கள்.

டெயில்பீஸ் ஸ்டோரி: மைலாத்தா இப்போது எங்களுக்காகவும் தனியாக சாப்பாடு கட்டி கொடுத்து விடுகிறார்கள்.எங்கள் காலை உணவு மைலாத்தாவின் கைபக்குவத்தில்,

சான்ஸே இல்லை... அப்படி ஒரு டேஸ்ட், அடி பொழி சமையல், எம்மியாக இருக்கிறது.

மைலாத்தாவின் சாப்பாட்டில் அன்பையும் குழைத்தே தருகிறார்கள்.
அவர்களை மைலாத்தா என்கிறதை விட 'நல்லாத்தா' என்று அழைப்பதே பொருத்தம்.

நல்லாத்தாவை ...
எங்களோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்களேன்.

     |   

Other Pages