சிவா டிபன் சென்டர் - வல்லன்குமாரவிளை
சிவா டிபன் சென்டர்..!!
அந்த உணவு விடுதியின் கல்லாவிலிருந்த பெரியவரிடம் இன்று காலை உணவு சாப்பிட்டு விட்டு அதற்கான ரூபாயை கொடுத்தோம். அவரிடம், ஐயா! கழிந்ததடவை நாங்கள் உங்கள் கடையில் சாப்பிட்ட போது ஒரு தோசைக்கான காசு கணக்கில் விடுபட்டு போனது அதனையும் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றோம்.
புன்னகைத்தவாரே, எனது கைகளை பிடித்து குலுக்கி அது இருக்கட்டும் தம்பி இங்க நாங்க கணக்கெல்லாம் வைத்துக்கொள்வது கிடையாது. சாப்பிட்ட பின்னர் வாடிக்கையாளர்கள் சொல்கிற கணக்கினை வைத்தே பணம் வாங்கிக் கொள்வோம் என்றார்.
கடலேடி தொடர் பதிவுகளுக்காக நண்பர் அருள் எழிலன் மற்றும் அவரது படப்பிடிப்பு குழுவினர் குமரி மாவட்டம் நாகர்கோவில் வரும் போதெல்லாம் நாங்கள் சாப்பிடுவதற்காக செல்லும் உணவு விடுதி இது.
வல்லன்குமாரவிளையில் சாணல்கரையில் உள்ளது இந்த "சிவா டிபன் சென்டர்". இது ஒரு சாதரண ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட கடை, அழிபோட்ட கடை என்றுக்கூட சொல்லலாம். அங்கு சாப்பிட உக்காருவதற்காக இடம் கிடைத்து விட்டால் நீங்க லக்கி Fellow தான்.
தோசை, இட்லி, ஆப்பம், என பட்டையை கிளப்புகிறார்கள். இங்கே ரசவடை சாப்பிட்டவர்கள் பாக்கியவான்கள். அது போக வாத்துமுட்டை வகையரா, சாதா முட்டை வகையராக்களான செட்டு, சிங்கிள், ஒன்சைடை, திருப்பி போட்டு, கலக்கி, ஆம்லெட், எண்ணை குறைத்து, மிளகு கூட்டி போட்டு, என வாடிக்கையாளர்களின் தேவைக்கு வழங்குகிறார்கள்.
கல்லாவிருந்த உரிமையாளர் 'செல்லம்' பாட்டாவிடம் கேட்டேன், "ஐயா, நான் ஒரு வேளை சாப்பிட்டு விட்டு ரூபாய் என்னிடம் இல்லை என்று சொன்னால் என்ன செய்வீர்கள் என்றேன்?"
சாப்பிட்ட பிறகு சொன்னால் திட்டி விட்டுவிடுவேன், அதே நேரம் நீங்க சாப்பிடுவதற்கு முன்னாடியே என்னிடம் காசு இல்லை என்றால், சாப்பிட அனுமதிப்பேன் என்றார்.
கிராமம் இன்றும் உயிர்ப்போடும் உறவோடும் இருப்பது செல்லம் போன்ற பாட்டாக்களால் தான்.
இந்த டிபன் சென்டரை எங்களுங்கு refer செய்த நண்பர் கிருஷ்ணகோபால்க்கு, "அவர் ஸின்சியர் தேங்ஸ்" பிரோ.
Courtesy: Jawahar Clicks